
அவை உரிமைக்குழு நோட்டீஸ்க்கு நீதிமன்றம் தடை விதித்தது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் எனவும், பேரவை உரிமைக்குழு சரியான நேரத்தில் மீண்டும் கூட்டப்படும் எனவும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட பான், குட்கா போதை பொருட்களை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த ஜூலை 19ஆம் தேதி சட்டப்பேரவைக்குள் எடுத்து வந்தனர்.
மேலும் அத்தகைய போதை பொருட்கள் தடையீன்றி கிடைப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புகைப்படம் ஆதாரத்துடன் காண்பித்தார். ஆனால் சபாநாயகர் அதை ஏற்கவில்லை. இந்த பிரச்சனையை உரிமைக்குழு விசாரிக்க சட்டப்பேரவைத்தலைவர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல். ஏக்களுக்கு பேரவை உரிமை குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
அதில், அதிமுக பெரும்பான்மை இழந்து நிற்பதாகவும் எடப்பாடியை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தியதால் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து செப் 14 ஆம் தேதி வரை திமுக மீது நடவடிக்கை எடுக்ககூடாது என கூறி வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவை உரிமைக்குழு நோட்டீஸ்க்கு நீதிமன்றம் தடை விதித்தது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் எனவும், பேரவை உரிமைக்குழு சரியான நேரத்தில் மீண்டும் கூட்டப்படும் எனவும் தெரிவித்தார்.