ஓரிடம் விடக்கூடாது.. எல்லா இடங்களையும் தூக்குறோம்.. துரைமுருகன் முன்னிலையில் உள்ளாட்சி தேர்தல் தீர்மானம்!

By Asianet TamilFirst Published Jul 26, 2021, 9:51 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவை தேர்தலைப் போலவே உள்ளாட்சி தேர்தலிலும் வேலூரில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற பாடுபடுவது என திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 
 

வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் செயற் குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் முகமதுசகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் ஆகியோரும் பங்கேற்றனர். திமுக பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான துரைமுருகன், மற்றொரு அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். 
இக்கூட்டத்தில்,  ‘சட்டப்பேரவை தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.  விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் என எல்லாப் பொறுப்புகளுக்கும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற வைக்க பாடுபடுவது உட்படப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தமிழகத்தில் கடந்த 2019 டிசம்பரில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டிருந்ததால் தேர்தல் நடைபெறவில்லை. தற்போது விடுப்பட்ட பகுதிகளுக்கு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் வேலூரில் திமுக தேர்தல் பணியைத் தொடங்குவதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டுள்ளது. 

click me!