சூர்யாவுக்காக நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம்... பாமகவுக்கு திராவிடர் விடுதலை கழகம் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Nov 17, 2021, 6:54 PM IST
Highlights

ஜெய்பீம் படத்தில் வரக்கூடிய ஒரு சில காட்சிகளால் பாமக கட்சியினர் ஜாதி ரீதியான மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது.

பாமக எந்த அளவுக்கு செல்கிறதோ? நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக நாங்களும் அதே அளவுக்கு செல்வோம் என திராவிடர் விடுதலை கழகம் தெரிவித்துள்ளது.

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இளம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே, ஜெய்பீம் திரைப்படம் குறித்து சூர்யாவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதற்கு சூர்யாவும் பதில் தெரிவித்திருந்தார். இந்த படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு பின்பக்கம் அக்னி கலசம் படத்துடன் கூடிய வன்னியர் சங்க காலண்டர் தொங்க விட்டு காட்சிப்படுத்தியதாகவும், குற்றவாளியான அந்தோனி தாஸ் கதாபாத்திரத்துக்கு வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை வைத்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சையை தொடர்ந்து, அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டது. ஆனாலும், ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாமகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் நடிகர் சூர்யா தரை வழியாக எங்கும் பயணம் செய்ய முடியாது. வான் வழிதாக தான் செல்ல முடியும் என்றும் மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் மிரட்டல் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாமக மாவட்ட செயலாளர் மிரட்டல் தொடர்பாக மயிலாடுதுறை பழனிச்சாமி மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் உமாபதி, நடிகர் சூர்யா பற்றி பழனிசாமி கூறிய கருத்து ஜாதி வன்மத்தோடு நடந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளதாகவும், தமிழ் சினிமாவில் கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான படங்கள் வெளிவந்து தேசிய விருதுகளை குவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜெய்பீம் படத்தில் வரக்கூடிய ஒரு சில காட்சிகளால் பாமக கட்சியினர் ஜாதி ரீதியான மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். பாமக கட்சியினர் எந்த அளவிற்கு செல்கின்றனரோ அதே அளவிற்கு நாங்களும் செல்ல தயாராக இருப்பதாக கூறினார். நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக தமிழக அரசும், காவல்துறையினரும் இருப்பதாக கூறினார்.

click me!