பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் சந்தானம்.. இதுதான் உங்க ஒழுக்கமா.?? பெ.தி.க போலீசில் புகார்.

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2021, 6:08 PM IST
Highlights

தண்ணீர் கேட்டு போராடும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் போஸ்டர் வெளியிட்டுள்ள சந்தானத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தின் தண்ணீர் உரிமைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் சந்தானத்தின் சபாபதி திரைப்பட போஸ்டர் அமைந்துள்ளதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெய்பீம் விவகாரத்தில் கருத்து கூறி சர்ச்சையில் சிக்கியுள்ள அவர் தற்போது போஸ்டர் விவகாரத்திலும் சிக்கியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தி விட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாமக, நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் சந்தானம் தெரிவித்த கருத்தால் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளத்தில் சாதிவெறி சந்தானம் என்று ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. நான் ஜெய்பீம் படத்தை இன்னும் பார்க்கல, எந்த படமாக இருந்தாலும் எது நம்ம கருத்தோ அதைத் தூக்கி பேசலாம், ஆனா அடுத்தவங்கள காயப்படுத்துவது மாதிரி பேசக்கூடாது. நாம எதை வேணாலும் தூக்கி பேசலாம், மற்றவர்களை காயப்படுத்திவிடக்கூடாது, இந்து மதம் சூப்பர்னா அதை சூப்பர்னு தூக்கி பேசலாம் ஆனால் இன்னொரு மதமான கிறிஸ்தவ மதத்தை தாழ்த்தி பேசக்கூடாது. மக்கள்  ரொம்ப தெளிவா இருக்காங்க என அவர் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து பாமகவுக்கு ஆதரவாகவும் சூர்யாவுக்கு அட்வைஸ் செய்வது போல இருந்ததால் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் புதிதாக நடித்து விரைவில் வெளியாக உள்ள சபாபதி திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது, அந்த போஸ்டரில் ஒரு பொது இடத்தில் உள்ள சுவரில் "தண்ணீர் திறந்து விடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்  திரண்டு வாரீர்" என எழுதப்பட்டுள்ளது. அந்த சுவற்றின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போல அந்த போஸ்டர் காட்சி உள்ளது. இது தமிழக விவசாயிகளையும், கர்நாடகத்தில் தமிழகத்திற்கான நீர் உரிமையை கேட்டு போராட்டம் நடத்தும் மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என சர்ச்சை வெடித்துள்ளது. தண்ணீர் கேட்டு போராடும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் போஸ்டர் வெளியிட்டுள்ள சந்தானத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பெரியார் திராவிட கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன்,  சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி படத்தின் விளம்பர போஸ்டர் முல்லைப்பெரியாறு, கர்நாடகா என அண்டை மாநிலங்களில் தண்ணீர் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளையும், தமிழக மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் அது உள்ளது. அதேபோல் சந்தானம் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது போல காட்சிகள் உள்ளது, ஒரு பொது இடத்தில் சிறுநீர் கழிக்க கூடாது எனப்பது பொது விதி, ஆனால் அவரின் இந்த காட்சிகள் தவறான முன்னுதாரணமாக உள்ளது. இது சட்டப்படி குற்றமாகும், இதை முன்னுதாரணமாக வைத்து பொதுமக்களும் இதுபோல் பொது இடங்களில் சிறுநீர் கழிக்க வாய்ப்புள்ளது. 

எனவே உடனடியாக போஸ்டரை நீக்குவதுடன், நடிகர் சந்தானம் மற்றும் இயக்குனர் சீனிவாசராவ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார். நடிகர் சந்தானம் நகைச்சுவை என்ற பெயரில் பலரை இழிவுபடுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும், தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், ஒடுக்கப்பட்ட மக்களை இழிவு செய்யும் வகையில் அவரது நகைச்சுவைகள் இருந்து வருவதாகும் அவர் மீது ஒரு விமர்சனம் உள்ளது. இந்நிலையில் அவரின் இந்த செயல்  பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் சந்தானத்தை சமூகவலைதளத்தில் பலரும் மிக கடுமையாக தாக்கி விமர்சித்து வருகின்றனர். 
 

click me!