இரட்டை இலை சின்னத்திற்காகவே வேட்பாளர் வாபஸ்; ஓ.பி.எஸ். ஆதரவாளர் விளக்கம்

By Velmurugan sFirst Published Feb 7, 2023, 2:05 PM IST
Highlights

இரட்டை இலை சின்னம் முடங்கிவிடக் கூடாது என்பதற்காக வேட்பாளர் திரும்ப பெறப்பட்டதாக ஓ.பி.எஸ். ஆதரவு அமைப்புச் செயலாளர் நாஞ்சில் கோலப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக ஓபிஎஸ் அணி ஈரோடு தேர்தல் ஆலோசனை குழு கூட்டம் இன்று அதிமுக ஓபிஎஸ் ஆதரவு அமைப்பு செயலாளரும், ஈரோடு தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவருமான நாஞ்சில் கோலப்பன்  தலைமையில் நாகர்கோவிலில் நடைப்பெற்றது, இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானங்களான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும். 

ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்து அவரது கரத்தை வலுப்படுத்த ஆர்வமாக உள்ள கட்சி முன்னோடிகள் மற்றும் இளைஞர்களை கட்சியில் இணைத்து கட்சியை வலிமை படுத்த வேண்டும். ஓ பன்னீர்செல்வம் ஆணையை ஏற்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக முழு வீச்சில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமைப்பு செயலாளர் நாஞ்சில் கோலப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு தேர்தல் பொறுப்பாளராக என்னை நியமித்துள்ளார். அதன் அடிப்படையில் தேர்தல் பணிகள் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்து ஆலோசனையில் ஈடுபட்டு வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். இரட்டை இலை சின்னம் முடங்கி விடக்கூடாது என்பதற்காக இந்த வாபஸ் நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

குடிமை பணி தேர்வு வயது வரம்பில் தளர்வு வேண்டும்; பிரதமருக்கு முதல்வர் கடிதம்

அனைவரும் ஒன்றிணைந்து அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதிமுகவை பொறுத்த அளவில் நாங்கள் ஒன்றிணைய தயாராக தான் உள்ளோம். அவர்கள் தான் ஒன்றிணை மாட்டோம் என பிடிவாதமாக உள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின்படி முடிவு செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். பாஜகவிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் செயல்படுகிறோம் என தெரிவித்தார்.

தர்மபுரியில் உறவினர்களிடையே மோதல்; அடுத்தடுத்து அரங்கேறிய இரட்டை படுகொலை

click me!