பாஜகவில் உள்ள பெண்களுக்கும் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம்.. அவர்கள் எங்கள் சகோதரிகள்.. கொதிக்கும் எம்.பி.

By Ezhilarasan BabuFirst Published Aug 26, 2021, 12:19 PM IST
Highlights

தனது சொந்த கட்சியில் உள்ள பெண்களிடம் தகாத முறையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜகவிடம், தமிழக பெண்கள் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

.

பாரதிய ஜனதா கட்சியில் பாலியல் குற்றவாளியான கே.டி ராகவனை கட்சியில் இருந்து நீக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியிலிருந்து நீக்கி இருப்பது வெட்கக்கேடானது கடும் கண்டனத்திற்குரியது எனவும் இன்னும் அந்த கட்சியில் எத்தனை பெண்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்களோ என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, 

இன்னும் எத்தனை சகோதரிகள் பாஜகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் பாரதிய ஜனதா கட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது. பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி, பாதுகாப்பற்ற கட்சி, அவர்கள் கண்ணியத்தை கலங்கப்படுத்தும் கட்சி என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவில் இருக்கிற ஒவ்வொரு பெண்ணும் நான் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறேன் என்று சொல்வதற்குக் கூட வெட்கப்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

பாரதிய ஜனதா கட்சியில் உள்ள சகோதரர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் கண்ணியமும் அங்கு இல்லை என்பது வெளிப்படை. இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து வருகிறது. அவர்களை தொடர்ந்து கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டும், அச்சுறுத்தவும் செய்கிறது. இதற்கு பாஜகவின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன், அகில இந்திய மாணவரணி செயலாளர் சண்முகம் சுப்பையா, ஆர்எஸ்எஸ் பின்புலமுள்ள மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் என்று தமிழகத்திலேயே ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும். இந்திய அளவில் வெட்கக்கேடான, அச்சமூட்டும் ஒரு பட்டியலே உள்ளது. பாரதிய ஜனதா கட்சி எதிர்க் கட்சியாக இருந்தாலும் அங்குள்ள சகோதரிகளும் எமது சகோதரிகளே. அவர்கள் தமிழகத்தின் மகள்கள். அவர்கள் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து துணை நிற்கும்.

தனது சொந்த கட்சியில் உள்ள பெண்களிடம் தகாத முறையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜகவிடம், தமிழக பெண்கள் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே வெளிவந்துள்ள பாஜகவின் கே.டி ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ மீதும், மேலும் இன்னும் வெளியிடப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகின்ற பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களின் மீதும், தமிழக காவல்துறை முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் எவ்வளவு உயர் பொறுப்பில் இருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழக பெண்களின் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஜோதிமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

click me!