அதிக தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்..! அடம் பிடிக்கும் காங்கிரஸ்..! ராகுல் வந்து சென்ற பிறகு நடந்தது என்ன..?

By Selva KathirFirst Published Feb 19, 2021, 10:04 AM IST
Highlights

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு எழுச்சியான வரவேற்பு இருந்ததை காரணம் காட்டி மறுபடியும் 41 தொகுதிகள் வேண்டும் என்கிற விக்ரமாதித்யன் கதையாக காங்கிரஸ் கட்சி முருங்கை மரத்திற்கு ஏறியுள்ளது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு எழுச்சியான வரவேற்பு இருந்ததை காரணம் காட்டி மறுபடியும் 41 தொகுதிகள் வேண்டும் என்கிற விக்ரமாதித்யன் கதையாக காங்கிரஸ் கட்சி முருங்கை மரத்திற்கு ஏறியுள்ளது.

காங்கிரஸ் – திமுக இடையே கடந்த மூன்று மாதங்களாகவே திரை மறைவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களை போல் அல்லாமல் திரை மறைவில் அனைத்தையும் பேசி முடித்துவிட்டு அண்ணா அறிவாலயத்தில் வைத்து தொகுதிப் பங்கீடு தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திடும் வகையில் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. அதிமுகவில் ஜெயலலிதா இருந்த வரை இந்த பாணியில் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். அதே பாணியை தற்போது திமுக பின்பற்றி வருகிறது. இதனால் தேவையற்ற தர்மசங்கடங்கள், நெருக்கடிகள் தவிர்க்கப்படும் என்று திமுக கருதுகிறது.

அந்த வகையில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 21 தொகுதிகள் என்று பேச்சுவார்த்தை தொடங்கியது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் இரண்டு முறை தனது மேலிட பொறுப்பாளரை சென்னை அனுப்பி ஸ்டாலினை சந்திக்க வைத்தது. தன்னை சந்தித்த காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடமும் நிதர்சனத்தை காங்கிரஸ் உணர்ந்து கொள்ள வேண்டும், கடந்த தேர்தலை போல் இந்ததேர்தல் இல்லை என்பதை கூறி 21 தொகுதிகள் தான் என்பதை உறுதியாக கூறி ஸ்டாலின் அனுப்பி வைத்ததாக கூறுகிறார்கள். அதன் பிறகு திமுக – காங்கிரஸ் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.

அதே சமயம் கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் சுமார் 30 தொகுதிகளையாவது கொடுங்கள் என்று காங்கிரஸ் இறங்கி வந்தது. இதனால் டென்சன் ஆன திமுக தங்களால் 17 தொகுதிகள் தான் தர முடியும் என்று மிகவும் கறார் காட்டியது. இதனால் வெறுத்துப்போன காங்கிரஸ் தமிழகத்தில் தங்களுக்கு உள்ள மற்ற வாய்ப்புகள் குறித்து ஆராய ஆரம்பித்தது. 3வது அணி, கமலுடன் கூட்டணி, சசிகலாவுடன் உடன்பாடு போன்றவற்றை குறித்த காங்கிரஸ் சிந்திக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் ராகுல் காந்தி தமிழகத்தில் முகாமிட்டு மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரத்திற்கு பாஜக எதிர்ப்பு ஊடகங்களில் நல்ல முக்கியத்துவம் கொடுப்பட்டது.

இதனை வைத்து காங்கிரஸ் மறுபடியும் திமுகவை அணுகியது. தங்கள் தலைவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுவதாகவும் எனவே தங்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் திமுக மேலிடத்தை தொடர்பு கொண்டது. ஆனால் இந்த முறை காங்கிரசுக்கு திமுக எந்த பதிலும் அளிக்கவில்லை. அதே சமயம் தங்களுக்கு 41 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருப்பதாக கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கூற ஆரம்பித்துள்ளனர். மேலும் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்றும் அவர்கள் சொல்லி வருகின்றனர்.

தமிழக வருகையின் போது ராகுல் காந்தி கொடுத்த சில அறிவுறுத்தல்கள், தேர்தல் பணிகளில் அவர் காட்டும் ஆர்வம் போன்றவை காங்கிரஸ் தமிழக தலைவர்களை தெம்பாக்கியுள்ளது. இதனால் தான் ஏற்கனவே பிடிவாதம் காட்டும் திமுகவிடம் சளைக்காமல் அதிக தொகுதிகளை கேட்டு வருவதாக சொல்கிறார்கள். அதே சமயம் வெறும் 21 தொகுதிகளுக்கான நிச்சயம் காங்கிரஸ திமுக கூட்டணிக்கு செல்லாது என்று அந்த கட்சியின் வட்டாரங்கள் அடித்து கூறுகின்றனர். இதனால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நெருக்கடி திமுகவிற்கு உருவாகியுள்ளது.

click me!