சட்டப்பேரவைத் தேர்தலில் சீமான் கட்சியால் தோல்வி... புலம்பித் தள்ளிய மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி..!

By Asianet TamilFirst Published Jul 15, 2021, 9:14 AM IST
Highlights

ஜோலார்பேட்டைத் தொகுதியில் அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய 13 ஆயிரம் வாக்குகள் சீமான் கட்சிக்கு பெற்றது. இதற்கு அதிமுக கிளை நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள்தான் காரணம் என்று  முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேதனை தெரிவித்தார்.
 

அண்மையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணிதான் காரணம் என்று பேசியிருந்தார். இந்நிலையில் அதிமுக தோல்விக்கு நாம் தமிழர் கட்சி காரணம் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி பங்கேற்றார்.


அக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலில், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் நான் 30 முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிடுவேன் என்று தேர்தலுக்கு முன்பு கணிக்கப்பட்டிருந்தது. இத்தொகுதியில் ஒரு சில பகுதிகளில் இரட்டை இலைக்குச் சாதகமாக வாக்குகள் பதிவாயின. ஆனால், கிராமப்புறங்களில் அதிமுகவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அதிமுக நிர்வாகிகள் இளைஞர்களை உதாசீனப்படுத்தியதால் கடந்த தேர்தலில் நாம் தோல்வியைச் சந்தித்தோம்.
ஜோலார்பேட்டை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை யாரென்றே மக்களுக்குத் தெரியாது. அதிமுகவினர் இளைஞர்களை அரவணைத்துச் செல்லாததால், அவர்களுடைய வாக்குகள் எல்லாம் சீமான் கட்சிக்குச் சென்றுவிட்டது. நமக்குக் கிடைக்க வேண்டிய 13 ஆயிரம் வாக்குகள் சீமான் கட்சி பெற்றது. இதற்கு அதிமுக கிளை நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள்தான் காரணம். மக்கள் என்னைத் தோற்கடிக்கவில்லை. கட்சி நிர்வாகிகளால் நான் தோற்கடிக்கப்பட்டேன். அது இப்போதுதான் எனக்குத் தெரிந்தது.
திமுக பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி தி ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். ஆனால், விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு, பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக அரசு. ஆனால், மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இது நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதைதான் காட்டுகிறது. எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற அலட்சியமே தோல்விக்கு முக்கியக் காரணம். இனிவரும் காலங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். 
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். இதற்கு கட்சி நிர்வாகிகள் முழுமையாகப் பாடுபட வேண்டும். பூத் வாரியாக மக்களைத் தேடிச்சென்று அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் இழந்த வெற்றியை உள்ளாட்சித் தேர்தலில் மீட்டெடுப்போம். அதற்கான பணிகளைக் கட்சி நிர்வாகிகள் உடனடியாகத் தொடங்க வேண்டும்” என்று கே.சி.வீரமணி பேசினார்.
 

click me!