"வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம்.. ஆனால் ஹிந்தியை..." கொதிக்கும் ஜோதிமணி..!

By vinoth kumarFirst Published Oct 19, 2021, 8:38 PM IST
Highlights

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவில் தேசியமொழி என்று எதுவும் இல்லை. அலுவல் மொழிகள் மட்டுமே உண்டு. இந்தியாவின் 22 அலுவல் மொழிகளில் ஹிந்தியும் ஒன்று. 

அனைத்து மொழிகளையும் கொண்டாடுவோம், வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம். ஆனால் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க அனுமதிக்க மாட்டோம் என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் நேற்று சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்து இருந்தார். ஆனால் இவருக்கு உணவு முழுமையாக கிடைக்காமல் பாதி பொருட்கள் மட்டுமே வந்துள்ளது. இதனையடுத்து, சோமேட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்டபோது பணம் திரும்ப கிடைக்காது. நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதால் உங்களிடம் சரியாக விவரங்களை தெரிவிக்க முடியவில்லை என அவர் விகாஷிடம் கூறியுள்ளார். இதற்கு அந்த இளைஞர் விகாஷ், நீங்கள் தமிழ்நாட்டில் சேவை வழங்கினால் தமிழ் தெரிந்த ஆட்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 இதற்கு பதிலளித்த அந்த சோமேட்டோ அதிகாரி, இந்தி இந்தியாவில் தேசிய மொழி. இதனால் எல்லோரும் இந்தி தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என்று திமிராக பதில் அளித்துள்ளார். இதை டுவிட்டரில் பகிர்ந்து விகாஷ் சோமேட்டோ நிறுவனத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். இந்தி பற்றி உங்கள் கஸ்டமர் கேர் அதிகாரி பாடம் எடுக்கிறார். இதுதான் நீங்கள் கஸ்டமர்களை நடத்தும் விதமா என்று கேள்வி எழுப்பினார். இந்த ஸ்கிரீன்ஷாட்கள் இணையம் முழுக்க வைரலான நிலையில் பலரும் சோமேட்டோ நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனையடுத்து, #Reject_Zomato என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவில் தேசியமொழி என்று எதுவும் இல்லை. அலுவல் மொழிகள் மட்டுமே உண்டு. இந்தியாவின் 22 அலுவல் மொழிகளில் ஹிந்தியும் ஒன்று. 

ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி உண்டு.  அதுவே அந்தந்த மாநிலத்தின் தொப்புள்கொடி. அடையாளம். நமது அனைத்து மொழிகளையும் கொண்டாடுவோம். நமது பெருமைமிகு வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம். ஆனால் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க அனுமதிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

click me!