
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற அப்போதைய அதிமுக அரசுதான் உத்தரவிட்டது என உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து, இதுகுறித்து விசாரிக்க ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்படி பலரிடமும் இந்த விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. அந்த ஆணையம் விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் மற்றும் கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பல்லோ மருத்துவமனை அடுக்கடுக்கான புகார்களை முன்வைக்கப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனை சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிடுகையில்;- ஜெயலலிதாவுக்கு பிரைவஸி தேவை என்று அதிமுக அரசு கூறியதால்தான் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றினோம். மருத்துவ ரீதியிலான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளவில்லை. ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இல்லை. எந்த அடிப்படையில் மருத்துவ விவரங்களை நாங்கள் தெரிவிப்பது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தால் அப்பல்லோ மருத்துவமனைக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என அரியமா சுந்தரம் வாதிட்டார்.