ரொம்ப அலர்ட்டா இருங்க.. எதற்கும் தயாரா இருங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2021, 1:02 PM IST
Highlights

உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்புகடிக்கு மாற்று மருந்து, ஆக்ஸிஜன் உருளைகள் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பல்வேறு ஏரி குளம் நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்றும், முழு கொள்ளளவை எட்டி உள்ள அணைகள் நீர்த்தேக்கங்கள் ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் முக்கிய நீர் நிலைகள் நிரம்பி வருகிறது, இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். தலைமைச் செயலாளர் இறையன்பு, துறைசார்ந்த செயலாளர்கள் மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில் எந்த நேரத்திலும் அணைகள் உடைப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், வெள்ள அபாயம் ஏற்படுவதை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தடி நீரை செறிஊட்டவும், வெள்ள பாதிப்புகளை தவிர்க்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

அணை பாதுகாப்பு , அணைகள் நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் வெளியேற்றுவது தொடர்பான விதிமுறைகளை தவறாது பின்பற்றி உபரி நீர் திறப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கைகளை வழங்கி, உபரி நீரை திறந்து விட வேண்டும். பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் வைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றவும், தாழ்வாக செல்லக்கூடிய மின்கடத்திகளை சரி செய்திடவும், பில்லர் பாக்ஸ்களை உயர்வான இடங்களில் வைக்கவும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்குவதால் பயிர்கள் மூழ்கி சேதமாகும் சூழல் ஏற்பட்டு விடக்கூடாது, எனவே வடிகால்களை தூர்வார வேண்டும். அறுவடை செய்த நெல் மணிகளையும் பாதுகாத்திட வேண்டும், மழைக்காலங்களில் நோய் அதிகம் உருவாகி விடக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது, அதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்புகடிக்கு மாற்று மருந்து, ஆக்ஸிஜன் உருளைகள் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் மக்களை மீட்கும் போது மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும். இதற்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், அனைத்து துறைகளினுடைய ஒருங்கிணைப்பால், ஏற்படக்கூடிய அனைத்து பாதிப்பையும் தடுக்க முடியும் என்றார். 
 

click me!