ஆளுநர் கிட்ட வேற விஷயத்தையும் பேசியிருக்கோம்.. ஆனால் வெளியே சொல்ல மாட்டேன்.. டுவிஸ்ட் வைக்கும் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Nov 24, 2020, 4:04 PM IST
Highlights

தமிழக ஆளுநரிடம்  7 பேர் விடுதலை விவகாரம் மற்றும் வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம். இதை வெளியில் சொல்ல முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழக ஆளுநரிடம்  7 பேர் விடுதலை விவகாரம் மற்றும் வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம். இதை வெளியில் சொல்ல முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை, ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து, தான் எழுதியுள்ள கடிதத்தை வழங்கினார்.

பின்னர், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்;- ஏறத்தாழ 29 ஆண்டுகாலம் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆளுநரைச் சந்தித்திருக்கிறோம். ஏற்கெனவே ஏன் தாமதம் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, சி.பி.ஐ-யிடம் கருத்துகளைக் கேட்கிறோம் என்று பதில் சொல்லப்பட்டது. தற்போது, ‘இதுகுறித்து ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும், இதில் முடிவெடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை’ என்று சி.பி.ஐ. தெளிவாக உச்சநீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது.

2018 செப்டம்பர் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடி இதற்காகத் தீர்மானமே போட்டிருக்கிறது. எனவே, ஆளுநர் அவர்கள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம். சட்டரீதியாகவும் மனிதாபிமான முறையிலும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம். பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் அவர்கள் 29 ஆண்டுகாலம் தன்னந்தனியாக நின்று இதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் ஆளுநரிடம் தெளிவாக எடுத்துச்சொல்லியிருக்கிறோம், ஆளுநரும் அவற்றையெல்லாம் முறையாக பரிசீலித்துத் உரிய முடிவெடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

தீர்மானம் நிறைவேற்றி இரண்டு ஆண்டுகள் ஆகியும் முடிவெடுப்பதில் ஏன் காலதாமதம் என்று ஆளுநர் சொன்னாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின் சட்டரீதியிலான விஷயங்களை விளக்கினார். நாங்களும் சட்டரீதியான விஷயங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். ஏற்கெனவே ஜெயலலிதா ஊழல் வழக்கில் அவருக்கு எதிரான தீர்ப்பு வந்தபோது தர்மபுரியில் மூன்று மாணவிகளை அ.தி.மு.க.வினர் எரித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க.வினர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினோம். ஏழு தமிழர் விடுதலையில் சட்டரீதியாக மட்டும் அணுகத்தேவையில்லை. 29 ஆண்டுக்காலம் சிறையில் வாடியிருக்கிறார்கள் என்பதால் மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம் என கூறியுள்ளார். 

click me!