RBI : தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்கிறோம், மதிக்கிறோம்.. அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி!

By vinoth kumarFirst Published Jan 27, 2022, 10:24 PM IST
Highlights

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு மரியாதை செலுத்துவதன் அடையாளமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. எனினும் பின்னர் அதனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் பாடல் குறித்து சற்றும் எதிர்பாரத மற்றும் வருந்தத்ததக்க சில தேவையற்ற கூற்றுக்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநில பாடல் என்பதை நாங்கள் உணர்கிறோம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் 73-ஆவது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கொணடாடப்பட்டது. மத்திய, மாநில அரசுகளிலும் பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களிலும்  தேசிய கொடியேற்றி குடியரசுத் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி கிளையில் குடியரசுத் தினம் கொண்டாடப்பட்டது. விழாவின் இறுதியில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த அதிகாரி எழுந்து நிற்கவில்லை. இதனால், அங்கிருந்த ஒரு தரப்புக்கு அதிகாரிக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அதற்கு, ‘நீதிமன்றமே தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவையில்லை என்று கூறியிருக்கிறது’ என்று ரிசர்வ் வங்கி அதிகாரி கூறினார். 

இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, “தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நின்று மரியாதைச் செலுத்த வேண்டும்” என்று தமிழக அரசு மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.எம்.என். சாமி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், சென்னை மண்டல ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு மரியாதை செலுத்துவதன் அடையாளமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. எனினும் பின்னர் அதனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் பாடல் குறித்து சற்றும் எதிர்பாரத மற்றும் வருந்தத்ததக்க சில தேவையற்ற கூற்றுக்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநில பாடல் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஒரு ஒழுங்கு முறைப்படுத்தும் அமைப்பு என்கிற முறையில் நாங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மதிக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறோம். இது குறித்து ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தின் பிரதிநிதிகள் மண்டல இயக்குனர் எஸ் எம் என் சுவாமி தலைமையில் மாநில நிதி அமைச்சரை சந்தித்து இதன் தொடர்பான நிலைப்பாட்டை உறுதி செய்தனர்.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!