எங்களுக்கு ஹிந்தி தெரியாது, புரியாது!! அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய முதல்வர்...

By Ganesh RamachandranFirst Published Nov 9, 2021, 4:13 PM IST
Highlights

ஹிந்தி திணிப்புக்கு எதிராக என்றும் உறுதியுடன் களமாடும் மாநிலம் என்றால் அது தமிழகம் தான். தமிழர்களின் வழியில் தற்போது குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது வடகிழக்கு மாநிலமான மிஸோரம்.

1937ம் ஆண்டு முதலாகவே கட்டாய ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் போராடி வருகிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்க, அனைத்து மொழி பேசும் மக்களும் ஹிந்தி கற்க வேண்டிய கட்டாயம் இல்லை, விருப்பம் உள்ளவர்கள் கற்கலாம் என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. கல்வியிலும் இருமொழிக் கொள்கை தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, 1965ஆம் ஆண்டின் குடியரசு தினம் முதல் இந்திய யூனியனின் ஒட்டுமொத்த அலுவல் மொழியாக இந்தியே இருக்கும் என்ற சட்டம் நிறைவேற்றப்படவிருந்த நிலையில், ஜனவரி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டதில் மாணவர் தலைவராகத் தீவிரமாக ஈடுபட்டவரான பா. செயப்பிரகாசம், சின்னச்சாமி ஆகியோர் 1964ல் தீக்குளித்து உயிரிழந்ததை நினைவுகூறும் வகையில் ஜனவரி 25ஆம் தேதியை மொழிப்போர் தியாகிகள் தினமாகவும் கடைபிடித்து வருகிறோம்.

பிராந்திய மொழியை மட்டுமே பேசக்கூடிய ஹிந்தி அறியாத பல கோடி மக்கள் இந்தியாவில் உள்ளனர். தற்போதும் அவ்வப்போது அரசு நிர்வாக ரீதியில் மொழிப் பிரச்சனை ஏற்பட்டு கொண்டுதான் உள்ளது. மிசோரம் மாநிலத்தில் அத்தகைய பிரச்சனையே தற்போது ஏற்பட்டுள்ளது.

மிசோரம் முதல்வர் ஸோரம் தங்கா

 

பெரும்பாண்மையான மிசோரம் மாநில மக்களுக்கு ஹிந்தி தெரியாது என்பதால், அந்த மாநிலத்துக்கான தலைமைச் செயலாளர் நியமிக்கப்படும் போது மிஸோ மொழி தெரிந்த அதிகாரியே இத்தனை காலமாக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு வந்தார். ஆனால் தற்போது மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிக்கு மிஸோ மொழி தெரியாது என்பதே பிரச்சனை. மிசோரத்தின் தலைமைச் செயலாளராக இருந்த லால்னுமாவியா சாகோ ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்குப் பிறகு மத்தியஉள்துறை அமைச்சகம், ரேணு சர்மா என்பவரை புதிய தலைமைச் செயலாளராக கடந்த மாதம் 29ம் தேதி நியமித்தது. ஆனால் ரேணு சர்மாவிற்கு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிவதாகவும், அவரிடம் நிர்வாக ரீதியில் பேச முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சிரமப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நிர்வாக ரீதியில் பல சிக்கல்களை மிசோரம் மாநிலம் சந்தித்துள்ளது.

எனவே, மிசோரம் மாநில முதலமைச்சர் ஸோரம் தங்கா உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் புதிய தலைமைச் செயலாளரை மாற்றக் கோரியுள்ளார். தங்களுக்கு, குறிப்பாக தனது அமைச்சர்களுக்கு ஹிந்தியும் தெரியாது, ஆங்கிலமும் அதிகம் புரியாது என்றும், தங்கள் மாநில மொழியான மிஸோ மொழி தெரிந்தவரை தலைமைச் செயலாளராக நியமிக்கும் படியும் கேட்டுள்ளார்.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரேணு சர்மா பொறுப்பேற்ற அன்றே, மாநில அரசு போட்டியாக ராம்தங்கா என்ற அதிகாரியை தலைமைச் செயலாளராக நியமித்துள்ளது. இதனால் மிசோரத்துக்கு தற்போது இரண்டு தலைமைச் செயலாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் மிசோரத்தில் ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி, பாஜகவின் நட்புக் கட்சிதான். நம்பிக்கையான ஒரு கூட்டணிக் கட்சியின் கோரிக்கையை பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றும் காட்டமாக அமித் ஷாவுக்கு எழுதியுள்ளார் மிசோரம் முதல்வர். தாய் மொழிக்கு ஆபத்து என்றால் கூட்டணிக் கட்சியையும் பகைத்துக் கொள்ளத் தயார் என்று உணர்த்திய மிசோரம் முதல்வர் பாராட்டுக்குரியவர்.

click me!