விவசாயிகளை எங்களால் சமாதானப்படுத்த முடியவில்லை.. வருந்துகிறேன்.. மனம் திறந்த மோடி..

By Ezhilarasan BabuFirst Published Nov 19, 2021, 10:23 AM IST
Highlights

இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்தது, இந்திய விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் விவாதப்பொருளாக மாறியது. இதற்கிடையில் அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் அங்கே பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்ய விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு அதிரடி சட்டங்கள், திடீர் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் கடந்த ஆண்டு வேளாண்மையை மேம்படுத்துவும்,  விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் புதிய வேளாண் சட்டத்தை கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த சட்டங்கள் வேளாண்மையை காப்பாற்றுவதாக தெரியவில்லை அது விவசாயத்தை மொத்தமாக அழிப்பதாக இருக்கிறது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தொடர்கினர். அவர்களின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததனர். அதாவது, உறுதி மற்றும் பண்ணை சேவை சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு சட்டம் என்பதே அந்த மூன்று சட்டங்களாகும். 

ஆனால் இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு விரோதமானது என்றும் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யவில்லை என்றும் இச்சட்டங்கள் முழுக்க முழுக்க பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டது  என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த சட்டங்கள் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக மத்திய அரசு மறுத்து வந்தது. இந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விவசாய சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் மத்திய அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. ஆனால் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வரை தங்களது போராட்டம் ஓயாது என விவசாயிகள் உறுதியாக இருந்து வந்தனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ட்ராக்டர் பேரணி, ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்தது. நாடாளுமன்றத்திற்கு வெளியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது.

இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்தது, இந்திய விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் விவாதப்பொருளாக மாறியது. இதற்கிடையில் அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் அங்கே பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்ய விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். அதேபோல அம்மாநிலங்களில் பாஜக சார்பில் எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு சென்று விவசாயிகள் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். இந்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ்,  திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்து வந்தன. இதுவரை விவசாயிகளிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தியும் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் வாங்கவில்லை, இந்நிலையில் அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வழக்கம் போல இன்று உரையாற்றினார். காலை 9 மணிக்கு அவரது உரை தொடங்கியது. 

அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். கடந்த ஒரு வருடத்திற்கும்  மேலாக எல்லைகள் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் வீட்டுக்கு செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார். விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் பிரதமர் கூறினார்.  ஒர் ஆண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாக கருதப்படுகிறது.  விவசாயிகள் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தோம், ஆனால் விவசாயிகளை எங்களால் சமாதானப்படுத்த முடியவில்லை என்பது என்னை வருந்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

 

click me!