
டிடிவி தினகரனை காப்பாற்ற எந்த விலையும் கொடுக்கத் தயார் என்று அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனை சென்னை அழைத்து வந்துள்ள டெல்லி குற்றப்பிரிவு போலீசார், முதலில் பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பெசன்ட் நகரில் இருக்கும் அவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதோடு விடவில்லை அதிகாரிகள்.டிடிவி.தினகரனின் மனைவி அனுராதவிடமும் அடுக்கடுக்கான கேள்விகளை குற்றப்பிரிவு போலீசார் முன்வைத்தனர். அந்நிய செலாவணி வழக்கை விட, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் வகை தொகையில்லாமல் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.
சசிகலாவின் பேனர் அகற்றம், டிடிவி மீதான குற்றப்பிரிவு போலீசாரின் இறுகும் பிடி ஆகியற்றால் பன்னீர் டீம் ஏக குஷியில் இருக்கிறது. இதற்கிடையே டிடிவி.தினகரனை காப்பாற்ற எந்த விலையும் கொடுக்கத் தயார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " டிடிவி.தினகரன் மீதான நடவடிக்கைக்கு "டெல்லி".. "டெல்லி"... "டெல்லி" தான் காரணம். அரசியலில் தினகரன் வளர்வதை தடுப்பதற்காகவே டெல்லி சதி செய்கிறது. டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் எங்களுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா புகைப்படம் மற்றும் பேனர் அகற்றப்பட்டது சரித்திர அநீதி."
"பொதுச்செயலாளாரான சசிகலா கையெழுத்தில்லாமல் அதிமுகவில் எந்த அணுவும் அசையாது. இயக்கத்தின் சுமையை தோளில் சுமந்தவர் சசிகலா. எங்களுக்கு 87 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மாஃபா பாண்டியராஜனை நீக்கிவிட்டு மற்றவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இரு அணிகளும் ஒன்றிணைந்தால் மகிழ்ச்சியே" இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.