
திண்டுக்கல்
வரும் கல்வி ஆண்டில் இருந்து கொண்டுவரப்படவுள்ள பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் இருக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நீட் உள்பட போட்டி தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தில் ஒன்பது இடங்களில் இலவச பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
அதன்படி, திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் கடந்த 9-ஆம் தேதி முதல் 429 மாணவ - மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பயிற்சி மையத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
அப்போது மாணவர்கள் மத்தியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "கல்வித் துறைக்கு மட்டும் தமிழக அரசு இந்த ஆண்டு ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது.
நீட் உள்பட போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் 3150 மாணவ - மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 2000 மாணவர்கள் நீட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவர் சீட்டை பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் கருதி வரும் கல்வி ஆண்டில் இருந்து 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. இந்த பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் இருக்கும்.
மேலும் 1-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீர், காற்று, நிலம் மாசுபாடு, திட்டக்கழிவு மேலாண்மை, பெற்றோர், மூத்தவர்களை மதிப்பது, தேசப்பற்று ஆகிய பகுதிகள் இருக்கும்.
வருகிற ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறந்தவுடன் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் புதிய சீருடைகள் வழங்கப்படும். இதேபோல ஜூன் மாதத்தில் இருந்து 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளை இணையதளம் மூலம் இணைக்க ரூ.453 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று பேசினார்.