
இரட்டை இலை சின்னம், கட்சி பெயர் ஆகியவற்றை ஒதுக்குவது தொடர்பாக ஆவணங்களை சமர்ப்பிக்க கூடுதலாக 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என தினகரன் அணி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் முடக்கியது. முதல்வர் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு சின்னத்தையும் கட்சி பெயரையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என கோரினர்.
இதையடுத்து செப்டம்பர் 29-ம் தேதிக்குள் அனைத்து ஆவணங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறும் சின்னம் தொடர்பான இறுதி விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கியது, இரட்டை இலை சின்னத்தை மீட்பது என பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல், முதல்வர் அணி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது.
இதுதொடர்பான மேலும் விரிவான ஆவணங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்கள் முதல்வர் அணி தரப்பில் வரும் 28-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
இப்படியாக இரட்டை இலை சின்னத்தை மீட்க முதல்வர் அணி தரப்பில் அதிதீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், ஆவணங்களைத் தாக்கல் செய்ய தினகரன் தரப்பில் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.
தினகரன் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டிருப்பது முதல்வர் அணிக்கு சாதகமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.