நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் நிக்கிறோம்.. அதிமுகவை ஜெர்க் ஆக்கிய அண்ணாமலை.!

By Asianet TamilFirst Published Nov 21, 2021, 9:36 PM IST
Highlights

"அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. பாஜக - அதிமுக கூட்டணி உறவு சுமூகமாக உள்ளது.” என்று அண்ணாமலை தெரிவித்தார். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட பாஜக விரும்புகிறது என்று அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெற கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. முதல் கட்சியாக பாஜக விருப்ப மனுக்களை நேற்று முதல் கட்சியினரிடம் பெற்று வருகிறது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில், சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்காக பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். அந்தச் சட்டங்களை பற்றி விவசாயிகளுக்கு புரிய வைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால், அச்சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளுக்குப் புரிய வைக்க முடியவில்லை. ஓராண்டாகத் தொடர்ந்து விவசாயிகள் போராடி வந்தனர். விவசாயிகளின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பிரதமர் மோடி, கார்த்திகை தீபம் அன்று தாமாகவே முன்வந்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். 

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில், வேளாண் சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். வேளாண் சட்டங்களையும் நீட் தேர்வையும் ஒன்றாக ஒப்பிட முடியாது. நீட் தேர்வு பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. வெறும் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் நீட் தேர்வு விஷயத்தை விடாமல் தொடர்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு பிரச்சினையை கையில் எடுத்து, அதன் மூலம் அரசியல் ஆதாயத்தை திமுக தேடுகிறது. இந்த நாடகத்தை திமுக அரசு நாடகத்தை கைவிட வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தத் தேர்தலில், அதிக இடங்களில் போட்டியிட பாஜக விரும்புகிறது. அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. பாஜக - அதிமுக கூட்டணி உறவு சுமூகமாக உள்ளது.” என்று அண்ணாமலை தெரிவித்தார். 

click me!