
நடிகர் கமலஹாசனுடன் அரசியலில் இணைந்து செயல்படுவீர்களா என ரஜினியிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அதற்கு காலம் தான் பதில் சொல்லும் என தெரிவித்ருந்த நிலையில், ரஜினியின் வழி வேறு, எனது வழி வேறு என கமல் பதில் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்து அதற்கான பணிகளில் சுறுசுறுப்பான ஈடுபட்டு வருகின்றனர்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு அரசியல் சுற்றுப்பயணத்தையும் தொடங்க உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழக சட்டசபைக்கு 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என தெரிவித்தார்.
அப்போது நீங்களும், கமல்ஹாசனும் அரசியலில் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், அதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும் கட்சி தொடங்குவதாக அறிவித்த கமலுக்கு வாழ்த்துக்கள் எனவும் கூறினார்.
கமல்ஹாசன் என்னுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிகிறேன் என நடிகர் கமல்ஹாசன் கூறிஉள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காலம் அனைத்திற்கும் நல்ல மருந்து என்றும், மனங்கள் இணைந்து செயல்பட நாம் எந்த தியாகங்களையும் செய்யலாம் எனவும் குறிப்பிட்டார்.
மக்கள் தங்களுடைய பலத்தை உணரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்றும், மக்கள் பிரச்சனையை மக்களிடம் எடுத்துச் செல்லவே சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.
ஆன்மிக அரசியல் என்பது ரஜினிகாந்த் நம்பிக்கை , பகுத்தறியும் அரசியல் பண்ண நினைப்பவன் நான், எனவே ரஜினியின் வழி வேறு, எனது வழி வேறு என கமல்ஹாசன் கூறிஉள்ளார்.