
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தாம் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் திடீர் பல்டி அடித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் தொடர் சிகிக்சைக்குப் பிறகு டிசம்பர் மாதம் 5 தேதி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக திடீர் என மரணமடைந்ததார். மருத்துவமனை நிர்வாகத்தின்படி 5 ஆம் தேதி இரவு ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.
இதனிடையே திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரரான திவாகரன் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார்.
அதில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாகவும், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை குழுமத்துக்கு சொந்தமான மருத்துமனைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்ட பின்னர், மறுநாள் 5-ம் தேதி தாமதமாக அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டதாகவும் அவர் பேசினார். திவாகரனின் இந்த பேச்சு தமிழகம் முழவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்நிலையில், தனது மன்னார்குடி பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தற்போது திவாகரன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதா கிளினிக்கல் ரீதியில் மரணமடைந்தார் என்றும், பயாலஜிக்கல் மரணம் ஏற்படாமல் தடுக்க உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் திவாகரன் கூறியுள்ளார்.
திவாகரனின் இந்த பேச்சு அதிமுக கட்சினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது