அடிதூள்.. இனி கரண்ட் பில் குறித்து செல்போனுக்கு மெசேஜ்.. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நாளை தொடங்குகிறது.

By Ezhilarasan BabuFirst Published Feb 28, 2022, 1:01 PM IST
Highlights

திட்ட செலவாக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பின் மின்சார துறை சார்ந்த ஊழியர்கள் நேரடியாக கணக்கெடுப்பை நடத்தாமல் மென்பொருள் மூலம் மின் கணக்கெடுப்பு தேதி வரும்போது நேரடியாக மின் நுகர்வோரின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்

மின் கட்டணம் குறித்த விவரங்கள் நுகர்வோரின் செல்போனுக்கு அனுப்பி வைக்கும் வகையிலான ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் பணி சென்னையில் நாளை முதல் தொடங்க உள்ளது. இதற்காக  144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெரும்பாலும் அவைகள் மக்கள்  மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. குறிப்பாக மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் மின்சார வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. ஆட்சி பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் அதைக் கூறி திமுக அரசின் மிக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தன.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் மின்வெட்டு தமிழகமாக மாறிவிடுகிறது என்று விமர்சித்தன. ஆனால் அதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது ஏற்படுகிற மின்வெட்டு என்பது கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் செய்த தவறுகளில் வெளிபாடு என்றும், கடைசி 5 ஆண்டுகளில் மின் கட்டமைப்புகளை அதிமுக ஆட்சியாளரகள்  முறையாகப் பராமரிக்கவில்லை, அதனால்தான் ஆங்காங்கே மின் கட்டமைப்புகளில் கோளாறு ஏற்பட்டு மின்வெட்டு ஏற்படுகிறது, அவை விரைவில் சரி செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதேபோல கட்டமைப்புகள் சரிபார்க்கப்பட்டு தொடர் மின்விநியோகம் நடந்து வருகிறது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில் பயன்பாட்டில் இருப்பதைப் போல, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முதற்கட்டமாக நாளை சென்னை தி.நகரில் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என மின்சார வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் 3 கோடியே 60 லட்சம் மின் இணைப்புகள் இருக்கிறது. 

மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை தியாகராய நகரில் ஒரு லட்சத்து 41 ஆயிரம் மின் இணைப்புகளில், முதற்கட்டமாக 90 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் சோதனை அடிப்படையில் நாளை முதல் பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டம் செயல்படுத்தாமல் இருந்த காரணத்தினால் மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் இத்திட்டம் சோதனை முறையில் தொடங்க உள்ளது.

திட்ட செலவாக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பின் மின்சார துறை சார்ந்த ஊழியர்கள் நேரடியாக கணக்கெடுப்பை நடத்தாமல் மென்பொருள் மூலம் மின் கணக்கெடுப்பு தேதி வரும்போது நேரடியாக மின் நுகர்வோரின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் அதன்மூலம் நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம் எனவும், இந்தத் திட்டத்திற்கான வரவேற்பை பொருத்து தமிழகம் முழுவதும் 2026ம் ஆண்டுக்குள் 3 கோடியே 60 லட்சம் நுகர்வோருக்கும்  ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

click me!