இந்திய விமானப்படை விமானங்களை அனுப்புங்க.. ரஷ்யாவிடம் பேசுங்கள்.. மாணவர்களை மீட்க துடிக்கும் ராமதாஸ்.

By Ezhilarasan BabuFirst Published Feb 28, 2022, 12:32 PM IST
Highlights

தில்லியிலுள்ள உக்ரைன் தூதரை வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைத்துப் பேசுவதன் மூலம், அந்த நாட்டில் உள்ள இந்திய மாணவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் அண்டை நாடுகளுக்கு வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும். சிறிய விமானங்களை அனுப்புவதற்கு பதிலாக பெரிய விமானங்களையும்,  வாய்ப்பிருந்தால், இந்திய விமானப்படை விமானங்களை உரிய அனுமதிகளைப் பெற்று இயக்குவதன் மூலமும் இந்திய மாணவர்களை விரைவாக தாயகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஷ்யவுடன் பேசி உக்ரைனில் தாக்கப்படும் இந்திய மாணவர்களை விரைவாக  மீட்க நடவடிக்கை வேண்டும் என்றும் அதற்காக இந்திய விமானப்படை விமானங்களை அனுப்ப வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். 

மேலும் அவர் கூறியிருப்பதாவது:- உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனுபவிக்கும் அவதிகளும் அதிகரித்து வருகின்றன. ஒருபுறம் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் நிலையில், மற்றொருபுறம் உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் எல்லைகளில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய மாணவர்களின் துயரம் தொடருவதை அனுமதிக்கக் கூடாது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ஐந்தாவது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் நாட்டில் மக்கள் குடியிருப்புகள் மீதும் குண்டுகளும், ஏவுகணைகளும் வீசப்படும் நிலையில், மருத்துவப் படிப்பதற்காக அங்கு சென்றுள்ள இந்திய மாணவர்களும், வணிகம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அங்குள்ள  இந்தியர்களும் எப்படியாவது தாயகம் திரும்ப வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கின்றனர். 

உக்ரைன் நாட்டிலிருந்து அவர்களை நேரடியாக விமானம் மூலம் மீட்க முடியாது என்பதால், அவர்களை அண்டை நாடுகளுக்கு வரவழைத்து, விமானம் மூலம் இந்தியா அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவுக்கு வருவதற்காக போலந்து எல்லையை கடக்க முயன்ற இந்திய மாணவர்கள் மீது உக்ரைன்   இராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய மாணவர் ஒருவரை உக்ரைன் ராணுவ வீரர் எட்டி உதைக்கும் காணொலி வெளியாகியுள்ளது. அவர் தவிர, எல்லையைக் கடக்க முயன்ற இந்திய மாணவிகள் சிலரை தலைமுடியை பிடித்து இழுத்து உக்ரைன் படைகள் தாக்கியதாகவும், இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்கியதில் சில மாணவிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மற்றொருபுறம் ருமேனியா எல்லை வழியாக வெளியேற முடியாமலும் இந்திய மாணவர்கள் தவிக்கின்றனர். குண்டு மழைகளை கடந்து பல கிலோ மீட்டர் பயணித்து ருமேனிய எல்லைக்கு சென்ற மாணவர்கள், வெளியேற முடியாமல் உணவு, தண்ணீரின்றி மைனஸ் 4 டிகிரி குளிரில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒருபுறம் சாத்தான்.... இன்னொருபுறம் ஆழமான நீலக்கடல் (Between the Devil and the Deep Blue Sea)... இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொண்டவர்களின் நிலையில் தான் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் நிலை உள்ளது. 

ஒருபுறம் அவர்கள் அச்சத்தையும், பதற்றத்தையும், உடல் ரீதியிலான கொடுமைகளையும் அனுபவித்து வருகிறார்கள் என்றால், மற்றொருபுறம் தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் உள்ள அவர்களின் பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளின் நிலையை எண்ணி வேதனையிலும், மன உளைச்சலிலும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும்  தெரியாத சூழலில், மாணவர்களை எவ்வளவு விரைவாக மீட்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மீட்டு வருவதன் மூலம் தான் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் நிம்மதியை ஏற்படுத்த முடியும்.

தில்லியிலுள்ள உக்ரைன் தூதரை வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைத்துப் பேசுவதன் மூலம், அந்த நாட்டில் உள்ள இந்திய மாணவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் அண்டை நாடுகளுக்கு வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும். சிறிய விமானங்களை அனுப்புவதற்கு பதிலாக பெரிய விமானங்களையும்,  வாய்ப்பிருந்தால், இந்திய விமானப்படை விமானங்களை உரிய அனுமதிகளைப் பெற்று இயக்குவதன் மூலமும் இந்திய மாணவர்களை விரைவாக தாயகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உக்ரைனின் மேற்கு எல்லைகளில் உள்ள மாணவர்கள் ஐரோப்பிய நாடுகள் வழியாக மீட்கப்படும் நிலையில், உக்ரைன் தலைநகர் கியெவ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மாணவர்களை மீட்பது எளிதானது அல்ல. கியெவிலிருந்து போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு வெகுதொலைவு பயணிக்க வேண்டும் என்பதால் அது மிகவும் ஆபத்தானது. மாறாக, ரஷ்யா வழியாக அவர்களை எளிதாக மீட்டு வர இயலும். இது தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுடன் பேசி, கியெவ் உள்ளிட்ட நகரங்களில் தவிக்கும்  இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக ரஷ்யாவுக்கு வெளியேற பாதை ஏற்படுத்தித் தரவும், அவர்களை ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 

click me!