அடி தூள்... இனி சென்னைக்கு வெள்ள பாதிப்பே வராது.?? திருப்புகழ் தலைமையிலான குழு முதல்வரிடம் நாளை அறிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Dec 30, 2021, 12:16 PM IST
Highlights

இந்த குழு சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும், வெள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல், ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் நகர்ப்புற திட்டமிடல் போன்றவை குறித்தும் பல்வேறு கட்ட ஆய்வு நடத்தி வந்த நிலையில் நாளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், அதற்கான அறிக்கை நாளை தாக்கல் செய்ய உள்ளது.

சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு தமிழக முதலமைச்சரிடம் நாளை முதற்கட்ட  அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்பையடுத்து இனிவரும் காலங்களில் சென்னையில் ஏற்படும் வெள்ள  பாதிப்புகளைக் களைய வல்லுநர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் அதற்கான முதல்கட்ட அறிக்கையை அந்த குழு நாளை வழங்க உள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த அக்டோபர் நவம்பர் ஆகிய மாதங்களில் பேய் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தமிழகம் முழுவதும் கடும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சென்னை, நெல்லை, நாகை ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் சென்னை 3 முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னைவாசிகள் கடுமையான துயரத்துக்கு ஆளாயினர். வடகிழக்கு பருவமழை இயல்புக்கு மாறாக பன்மடங்கு அதிகமாக பெய்ததே அதற்கு  காரணமாக அமைந்தது. 

ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் கொட்டித் தீர்த்தன. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. அதேபோல் கடந்த ஆட்சிக்காலத்தில் தியாகராய நகர், கே.கே நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இனி ஆந்த பகுதிகளில் வெள்ள பாதிப்பே ஏற்படாது என கூறபட்ட நிலையில் மற்ற பகுதிகளை காட்டிலும் அந்த பகுதிகளில்தான் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அங்கு முறையாக ஸ்மாட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட வில்லை என்பதே அதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

எனவே சுமார் சிட்டி திட்டம் ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். அதேநேரத்தில் சென்னையில் மழை நீர் வடிகால் கட்டமைப்புகள் முறையாக இல்லாததும் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. அதிமுக திமுக என ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லையே என சென்னை மக்கள் புலம்பி தவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் போதும், சென்னை தத்தளிப்பது சாபக்கேடாக இருந்துவருகிறது. முறையான மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்தாததே காரணம் என்றும், அப்படி ஏற்படுத்தினாலும் அது அறிவியல் பூர்வமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இந்நிலையில் பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, இனி எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில்  வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது. எனவே இதை முதல் பணியாக முன்னெடுத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் மழைக்காலத்தில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், வெள்ள நீர் வடிகால்களை வடிவமைக்கவும், சுற்றுச்சூழல் நகர திட்டமிடல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுநர்களை உள்ளடக்கிய சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மை குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். அந்த குழுவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன கூடுதல் செயலாளருமான திருப்புகழ் தலைமையில் சென்னை பெருநகர வெள்ள பேரிடர் தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான 14 உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும், வெள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல், ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் நகர்ப்புற திட்டமிடல் போன்றவை குறித்தும் பல்வேறு கட்ட ஆய்வு நடத்தி வந்த நிலையில் நாளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், அதற்கான அறிக்கை நாளை தாக்கல் செய்ய உள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு இனி எதிர்வரும் காலங்களில் நடக்காமல் இருப்பதற்கான திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகவும், அதேபோல் தற்போது உள்ள மழைநீர் வடிகால் கட்டமைப்புகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விரிவான தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் படி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

click me!