10 தனிப்படைக்கும் தண்ணி காட்டும் ஒத்த ராஜேந்திர பாலாஜி.. காக்கிகளை கதறவிடும் கேடிஆர்.. மண்டை காயும் போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Dec 30, 2021, 11:17 AM IST
Highlights

அந்த மலை  கிராமம் தர்மபுரி மாவட்டத்தில் இருந்தாலும் சேலம் ஆத்தூரிலிருந்தும், கள்ளக்குறிச்சியில் இருந்தும் கல்வராயன்மலை வழியாகதான் இங்கு வந்து செல்ல முடியும். எனவே அந்த இடத்திற்கு யாராக இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு தான் வரவேண்டும். அதனால் மாஜி அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜி அங்கு தனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் பதுங்கி இருக்கலாம் என்றும் காட்டுத்தீயாக தகவல் பரவியது.

இதுவரை பல தனிப்படைகள் அமைத்தும் தலைமறைவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் இங்கே இருக்கிறார், அங்கே இருக்கிறார் என போலீசார் அங்குமிங்குமாக அவரை ஓடி தேடி வரும் நிலையில் இதுவரையிலும் அவரைப்பற்றி எந்த உறுதியான துப்பும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் கைது செய்யப்படுவதில் கால தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. 

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி ராஜேந்திர பாலாஜி. செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் அதிகம் பேசப்பட்ட அமைச்சர்களில் இவரும் ஒருவர். தான் அதிமுக அமைச்சர் என்பதையும் மறந்து முழுக்க முழுக்க தன்னை ஒரு பாஜக தொண்டர் போலவே அவர் காட்டிக் கொண்டார் என்பதே அதற்கு காரணம். ' மோடி எங்கள் டாடி '  ' எங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் மேலே இருக்கிற (மோடி) ஆண்டவன் பார்த்துக் கொள்வான்'   ' ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை'  ' எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது'  ' ஸ்டாலின் ஒத்தைக்கு ஒத்த வர தயாரா'  என பல வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் ராஜேந்திரபாலாஜி. திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் கைது செய்யப்படுவது ராஜேந்திரபாலாஜியாகத்தான் இருக்கும் என்றும், அப்போது கூறப்பட்டது. அந்த அளவிற்கு அவர் திமுக தலைவர் ஸ்டாலினை மிக மோசமாக, தரக்குறைவாக பேசி வந்தார் என்பதே அதற்கு காரணம்.

இந்நிலையில்தான் கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்தார் என அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என ஜாமீன் கேட்டு ராஜேந்திரபாலாஜி மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரது மனுவை ரத்து செய்தததை அடுத்து, ராஜேந்திர பாலாஜி கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் அவர் பெங்களூருக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவர் கேரளாவில் பதுங்கியுள்ளதாகவும், அவர் விருதுநகர் மாவட்டத்திலேயே பதுங்கி விட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. போலீசார் இதுவரை பெங்களூருக்கும், கேரளா என பல மாநிலங்களுக்கு சென்று தேடியும் ராஜேந்திரபாலாஜி அகப்படவில்லை. அவர் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் பழைய பட்டன் மாடல் செல்போனை உபயோகித்து வருவதாகவும், அதனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை ட்ராக் செய்வதில் சிரமம் இருக்கிறது என்றும் போலீஸ் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

முன்னதாக தனது ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதை அடுத்து ராஜேந்திர பாலாஜி, வீட்டில் இருந்து  லுங்கி  பனியன் உடுத்தி டாட்டா ஏஸ் வாகனத்தின் மூலம், கிளீனராக மாறி வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினார் என்றும், அதே வாகனத்தின் மூலம் ஆனைக்குட்டம் அணை, புதுப்பட்டி, மங்கலம் வழியாக பயணித்து எரிச்சநந்தம் பகுதியில் பட்டாசு கம்பெனியின் அதிபர் ஒருவரின் இனோவா கார் மூலம் அழகாபுரி விளக்கு வழியாக மூணாறு சென்றார் என்றும், ஏறக்குறைய நான்கு மணி நேரத்தில் அவர் மாநில எல்லையை கடந்து, பெங்களூருவுக்கு சென்றார் என்றும், அதன் பிறகு அங்கிருந்து மும்பை சென்று ஒரு இனோவா கார் மூலம் டெல்லிக்கு சென்று பதுங்கி விட்டார் என்றும் தகவல் வெளியானது. இந்ந தகவலை அடுத்த தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜியை தேடி டெல்லி விரைந்துள்ளனர். அங்கு பாஜக பிரமுகர் வீட்டில் அவர் பதுங்கி இருக்கிறாரா என்று போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், 

தர்மபுரி அருகே உள்ள ஒரு மலை கிராமத்தில் ராஜேந்திரபாலாஜி பதுங்கி இருப்பதாக நேற்று காட்டுத்தீ போல தகவல் பரவியது. இதுகுறித்து போலீசார் கூறுகையில் தர்மபுரி அருகே பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சேலூர், அம்மாபாளையம் மலை கிராமம் உள்ளது. அந்த மலை  கிராமம் தர்மபுரி மாவட்டத்தில் இருந்தாலும் சேலம் ஆத்தூரிலிருந்தும், கள்ளக்குறிச்சியில் இருந்தும் கல்வராயன்மலை வழியாகதான் இங்கு வந்து செல்ல முடியும். எனவே அந்த இடத்திற்கு யாராக இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு தான் வரவேண்டும். அதனால் மாஜி அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜி அங்கு தனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் பதுங்கி இருக்கலாம் என்றும் காட்டுத்தீயாக தகவல் பரவியது. ஆனால் அந்த இடத்திற்கு உள்ளூர் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். தனிப்படை போலீசாரும் விரைந்தனர். ஆனால் ராஜேந்திரபாலாஜியை அங்கும் காணவில்லை. இதனால் தேடுதல் வேட்டைக்கு சென்ற தனிப்படை போலீசார் மண்டை  காய்ந்து திரும்பினர்.

இதனால் தலைமறையில் உள்ள முன்னாள் அமைச்சரின் உதவியாளர்களை பிடித்து விசாரிக்க தனிப்படை போலீசார் முயற்சித்து வருகின்றனர். இதுவரை 8க்கும்  அதிகமான தனிப்படைகள் அமைக்கப்பட்டும் ராஜேந்திரபாலாஜியை இன்னும் கைது செய்ய முடியவில்லை. இது தமிழக காவல்துறை மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாஜி அமைச்சரையே இவர்களால் பிடிக்க முடியவில்லேயே, கொடும் குற்றவாளிகளை எப்படி பிடிக்க போகிறார்கள் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் தமிழக போலீசார் பழைய டெக்னிக் முறையை பயன்படுத்துகின்றனர், ரியல் போலீஸ் வேலையை அவர்கள் மறந்துவிட்டனர் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இன்னும் ராஜேந்திர பாலாஜியின் செல்போனையே போலீசார் வட்டமடித்து வருகின்றனர். ராஜேந்திர பாலாஜி இந்த அளவிற்கு ஓடி தலைமறைவாகவதற்கு போலீஸின் மெத்தன போக்குதான் காரணம் என்றும், அவரது ஜாமின் மனு மீது தீர்ப்பு வரப்போவதை அறிந்திருந்தும் போலீஸார் ஏன் அவரை பின்தொடர தவறினர் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
 

click me!