தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது... மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

By Ezhilarasan BabuFirst Published Apr 6, 2021, 7:50 AM IST
Highlights

இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் இரவு முதலே வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர். அதேபோல தமிழக காவல்துறை மற்றும் துணை ராணுவ படை என ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக இன்று ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தன. அதிமுக-திமுக  மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு கோடை வெயிலையும் பொருட்படுத்தாது பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். கடந்த 4ஆம் தேதி மாலை பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. 

இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் இரவு முதலே வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர். அதேபோல தமிழக காவல்துறை மற்றும் துணை ராணுவ படை என ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் பலப்படுத்தி உள்ளது. தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர்.  பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 ஆக உள்ளது. 

7 ஆயிரத்து 192 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்களுக்கு போக்குவரத்து ஏற்படும் தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களும் வாக்களிக்கலாம் என்றும் அவர்களுக்கு வாக்களிப்பதற்கான நேரத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. களத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை  7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
 

click me!