தமிழக பாஜக நேர்காணலில் பணத்தை கொட்டி மிரட்டிய தொண்டர்... அதிர்ந்துபோன தலைவர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Jan 11, 2022, 12:59 PM IST
Highlights

ஒரு காலத்தில் பாஜகவில் போட்டியிட வேட்பாளர்களை தேடி வந்த நிலைமை மாறி இப்போது பலரும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு செலவழிக்க தயாராகி வருவது அக்கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. 

தமிழக பா.ஜ.க, சார்பில் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம், சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான  கமலாலயத்தில் சமீபத்தில் நேர்காணல் நடத்தினார்கள். கட்சி அலுவலகம் அருகில் ஓட்டல்கள் எதுவும் இல்லை. ஆகவே, நேர்காணலுக்கு வந்தவர்களுக்கு கட்சி அலுவலகத்திலேயே தடபுடலாக விருந்து சாப்பாடு தயார் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

காலையில் சுடச்சுட இட்லி, கிச்சடி, தோசை, வடை, கேசரி. மதியம் வெஜிடபிள் பிரியாணி, சாதம், சாம்பார், ரசம், மோர், வடை, பாயாசம். இரவு சப்பாத்தி, பரோட்டா, இடியப்பம், இட்லி என வகை, வகையாக விருந்து போட்டு அசத்தி இருக்கிறார்கள்.

அதை விட சுவாரஸ்யம் நடந்தது கோடம்பாக்கத்தில் உள்ள பாஜக தென் சென்னை மாவட்ட அலுவலகத்தில் தான். அங்கு ஆலந்துார், வேளச்சேரி, சோழிங்கநல்லுார், அம்பத்துார், மாதவரம், மதுரவாயல் தொகுதிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிட மனு அளித்தவர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தனர்.

அவர்களை தனித்தனியே அழைத்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன், சென்னை மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.

அப்போது ஆலந்துார் மண்டலத்தில், 156வது வார்டில் போட்டியிட சீட் கேட்டிருந்த சிவப்பிரகாசம், ''நான் தேர்தலில் 1 கோடி ரூபாய் செலவு செய்யத் தயார், என சொல்லிக் கொண்டே திடீரென, பையில் கட்டுக்கட்டாக எடுத்து வந்திருந்த, 500 ரூபாய் நோட்டுக்கள்  25 லட்சம் ரூபாயை நிர்வாகிகள் முன் கொட்டிவிட்டார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத நிர்வாகிகள் சிவப்பிரகாசத்தின் ஆர்வத்தை கண்டு திகைத்துப்போய் விட்டனர். பின்னர் நிதானத்துக்கு வந்த நிர்வாகிகள் பணத்தை பத்திரமாக எடுத்துப்போங்க எனச் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

பல கட்சிகளில் பணம் செலவழிக்க முடியாது என நிர்வாகிகள் தங்களுக்கு சீட்டே வேண்டாம் என ஒதுங்கி வருகின்றனர். இந்நிலையில் ஒரு காலத்தில் பாஜகவில் போட்டியிட வேட்பாளர்களை தேடி வந்த நிலைமை மாறி இப்போது பலரும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு செலவழிக்க தயாராகி வருவது அக்கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. சிவப்பிரகாசம் ஒருபடி மேலே போய் 25 லட்சம் ரூபாயை கொட்டியது பாஜகவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 

click me!