பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் கொள்ளை.. ஆதாரத்துடன் ஆளும் திமுகவின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிய எடப்பாடியார்.!

By vinoth kumarFirst Published Jan 11, 2022, 12:43 PM IST
Highlights

கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு பற்றி நேரடியாக மக்கள் சொன்ன கருத்துக்களைக் கேளுங்கள் என்றார். அந்த டேப்பில் கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு தரம் குறித்த வீடியோ ஒளிபரப்பானது. 

பொங்கல் தொகுப்புக்காக வட மாநிலங்களில் இருந்து தரமற்ற பொருட்களை வாங்கி ஆளுங்கட்சியான திமுக பொதுமக்களுக்கு விநியோகம் செய்கின்றது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு பற்றி நேரடியாக மக்கள் சொன்ன கருத்துக்களைக் கேளுங்கள் என்றார். அந்த டேப்பில் கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு தரம் குறித்த வீடியோ ஒளிபரப்பானது. 

இப்படிதான் தமிழகத்தில் பல இடங்களில் நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு இருக்கிறது. பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள் முழுமையாக கிடைப்பதில்லை. பல்வேறு நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பை எடுத்து செல்ல பைகள் வழங்கப்பவில்லை. பொருட்கள் எடை குறைவாக இருப்பதால் ரேஷன் ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். திருவண்ணாமலையில் 2.5 டன் வெல்லத்தை பயன்படுத்த உகந்ததல்ல என ஆட்சியர் நிறுத்தி வைத்துள்ளார். அதேபோல், ஓமலூரில் ரேஷன் கடையில் தரமற்ற வெல்லம் கொடுத்திருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் எப்படி பொங்கல் வைக்கமுடியும். புளியில் பல்லி இருந்ததாகச் செய்தி வெளியானது. பொங்கல் தொகுப்பு பொருட்கள் நெகிழியில் அடைக்கப்பட்டு தான் கொடுக்கப்படுகின்றன. 

பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் திமுக அரசு கொள்ளையடித்தது தான் மிச்சம். பொங்கல் தொகுப்புக்காக வட மாநிலங்களில் இருந்து தரமற்ற பொருட்களை வாங்கி விநியோகம் செய்கின்றனர். அதிக கமிஷன் கிடைப்பதால் வட  மாநிலங்களில் இருந்து பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்குகின்றனர். பொங்கல் தொகுப்புக்கான கரும்பு கொள்முதலில் கரும்பு ஒன்றுக்கு ரூ.15 வரை ஊழல் செய்துள்ளனர். பொங்கல் தொகுப்புக்கான துணிப்பை ஒன்றில் ரூ.30 வரை ஊழல் நடைபெற்றுள்ளது. 

விளம்பரம் மட்டுமே திமுக அரசின் மூச்சு, தினமும் நாளிதழ்களில் தொலைக்காட்சிகளில் வரவேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். சைக்கிளில் செல்வதிலும், டீ குடிப்பதிலும் தன்னை விளம்பரப்படுத்தி கொள்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

click me!