நாராயணசாமி கதிதான் ஸ்டாலினுக்கும்.! கவர்னர் ரவியை சாதாரணமாக நினைச்சுக்காதீங்க...! ராஜகோபாலன் பகீர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 11, 2022, 12:20 PM IST
Highlights

பல மாநில அமைச்சர்களும் பிரதமரை வரவேற்று பேசிவந்தனர். ஸ்டாலினும் பிரதமரை வரவேற்று கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் பல அமைச்சர்கள் தொடர்ந்து மத்திய அரசை அணுகி தேவையானவற்றை கோரி பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து மத்திய அரசையும் ஆளுநரையும் திமுகவை பகைத்துக்கொள்ளும் என்றால் பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமியை எப்படி கிரண்பேடி 5 ஆண்டுகள் அலைக்கழித்தாரோ அது போன்ற ஒரு நிலைமைதான் ஸ்டாலின் சந்திக்க நேரிடும் என்றும், ஆளுநர் ரவியை சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதீர்கள் என டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபால் எச்சரித்துள்ளார். தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்குமான  உறவு சுமுகமாக இருக்கிறது, ஆனால் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுகவை மத்திய அரசுக்கு எதிராக தூண்டி விடுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நீட் விலக்கு மசோதா மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன உரிமை உள்ளிட்டவைகள் குறித்து  முதல்வர் ஸ்டாலின்  ஆளுநருக்கு எதிராக காட்டமாக கருத்து தெரிவித்துள்ள நிலையில் ராஜகோபாலன் இவ்வாறு கூறியுள்ளார்.

பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது. அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் ஸ்டாலின் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் அதிமுக பாஜக என்ற காட்சிகள் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகின்றன. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் தாங்கள் தான் எதிர்க்கட்சிகள் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அதிமுகவை விட ஒருபடி மேலே சென்று திமுகவை விமர்சிப்பதில் பாஜக குறியாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் நாகலாந்தில் ஆளுநராக இருந்த ஆர்.என் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் இந்த நியமனம் உள்நோக்கம் கொண்டது, காவல்துறை பின்னணி கொண்ட ஒருவரை தமிழகத்தில் ஆளுநராக நியமிக்கும் நோக்கம் என்ன? என திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கேள்வி எழுப்பின.

மத்திய அரசு ஆர்.என் ரவியை திரும்பப் பெற வேண்டும் எனவும் அக்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஸ்டாலின் அரசுக்கு இடையூறு செய்யவே ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் காங்கிரஸ் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. ஆனால் சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டும் இலங்கையுடன் தமிழகம் எல்லையை பகிர்ந்து கொள்வதால்,  பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதாக மற்றொரு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது. மொத்தத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டது முதலே அவருக்கு எதிரான குரல் திமுகவின் கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் தமிழக ஆளுநருக்கும் தமிழக முதலமைச்சருக்குமான உறவு என்பது கடந்த வராம் வரை சமூகமாகவே இருந்து வந்தது எனலாம், கொரோனா தொற்று தடுப்பில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது, மழை வெள்ளம் பாதிப்பு நிவாரணம் என தமிழக முதல்வரின் செயல்பாடுகள் சிறப்பானது என ஆளுநர் தமிழக முதலமைச்சரை பாராட்டியிருந்தார். ஸ்டாலின் சக்தி வாய்ந்த முதல்வராக திகழ்கிறார் என்றும் அவர் மனமுவந்து கூறினார். அதேபோல் இந்த ஆண்டில் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரின் உரை தமிழக அரசின் கொள்கைகளை பறைசாற்றுவதாகவே அமைந்தது.

ஆளுநர் ரவி  ஸ்டாலின் அரசுக்கு தலைவலியாக இருப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் ஒரே அடியாக ஸ்டாலினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில்தான் நீட் விலக்கு மசோதா விவகாரம் மீண்டும் சர்ச்சையாக வெடித்துள்ளது.  தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி  வைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரையில் அதன்மீது ஆளுநர் பாராமுகமாக இருந்து வருகிறார்.  இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனாலும் இதுவரை அது கிடப்பில் இருந்து வருகிறது. ஆளுநர் ஆர்.என் ரவி என்னதான் தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் பாராட்டினாலும் அவர் காரியத்தில் அவர் கண்ணாய் இருக்கிறார். மத்திய அரசின் அஜெண்டாவை சரியாக ஃபாலோ செய்கிறார் என்பதே தமிழக முதல்வருக்கு தெளிவாக தெரியவந்துள்ளது. இதனால் ஆளுநருடன் முட்டல் மோதல் இல்லாமல் இருந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் முதல்முறையாக ஆளுநருக்கு எதிராக பேசத் தொடங்கியுள்ளார். 

அதாவது நீட் விலக்கு மசோதா குறித்து பாராமுகமாக இருந்து வரும் ஆளுநர் பதவி விலக வேண்டும் என திமுக எம்.பி டி.ஆர் பாலூ பேசியுள்ளார். அதேபோல் பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் தமிழக அரசுக்கும்  ஆளுநருக்கும்மான மோதல்  ஆரம்பமாகிவிட்டது என்று பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து டெல்லி மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபால் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு  பேட்டி கொடுத்துள்ளார். அதில் இனிவரும் காலங்களில் ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் பூதாகாரமாக வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு மாநில அரசுக்கு ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை வழங்குவது என பற்பல உதவிகளை செய்துள்ளது. அதேபோல் திமுக எம்.பி டிஆர் பாலுகூட டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது வெள்ளித் தட்டில் வைத்து பிரதமர் 1500 மருத்துவ இடங்களை தருகிறார். அப்படிப்பட்ட நிலையில் பிரதமரை வரவேற்காமல் என்ன செய்ய முடியும்? என கேள்வி எழுப்பி இருந்தார்.

பல மாநில அமைச்சர்களும் பிரதமரை வரவேற்று பேசிவந்தனர். ஸ்டாலினும் பிரதமரை வரவேற்று கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் பல அமைச்சர்கள் தொடர்ந்து மத்திய அரசை அணுகி தேவையானவற்றை கோரி பெற்று வருகின்றனர். மொத்தத்தில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்குமான உறவு நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இருக்கிற கூட்டணிக் கட்சி தலைவர் வைகோ, திருமாவளவன், கே.எஸ். அழகிரி, சீதாராம்  எச்சூரி போன்றோர் கூட்டணி கட்சிகளை தூண்டிவிடுகிறார்கள். யெச்சூரி சொன்னதின் அடிப்படையில் தான் அழகிரி ஆளுநருக்கு எதிராக அறிக்கை விட்டார். இந்நிலையில்தான் திமுக அரசு துணைவேந்தர்கள் நியமனம்  உரிமை மற்றும் நீட் விலக்கு மசோதா தொடர்பாக கருத்து ஒரு மோதலை தொடர்கி வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்,  கிரண்பேடி எப்படி நாராயணசாமி அவர்களை பிரச்சினைக்குள்ளாக்கி ஐந்து வருடங்கள் அலைக்கழித்தாரோ அது போன்ற நிலைமைதான் முக ஸ்டாலினுக்கும் ஆளுநருக்கும் இடையே வரக்கூடும் என நான் எதிர்பார்க்கிறேன். 

வரயிருக்கும் மாதங்களில் இந்த பிரச்சனை பூதாகரமாகும். ஆளுநர் ரவியை சாதாரணமாக எடைபோட வேண்டாம். ஏனென்றால் அவர் அதிகாரியாகவும் இருந்தவர், அரசியல்வாதியாகவும் இருந்தவர், அவர் வந்திருக்கும் இடமும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு எல்லை மாநிலம், பஞ்சாப் எப்படி பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறதோ, அது போல இலங்கையுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் தமிழகத்திற்கு அவர் வந்திருக்கிறார். நன்றாக யோசித்து, கலந்தாலோசித்த பிறகு தான் ஆளுநர் ரவியை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது என்பதிலிருந்தே நாம் இதை புரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!