
ஆர்.கே.நகரில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, ஏற்கப்பட்டு பின் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேட்புமனுவை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை முடிவு செய்யும் அதிகாரியிடம் விஷால் ’ப்ளீஸ் சார்! ப்ளீஸ் சார்!’ என்று கெஞ்சிய காட்சிகள் வீடியோவாக வெளியே வந்து வைரலாகி இருக்கின்றன.
இவை ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் தேர்தலின் லகானானது எப்படி அதிகார வர்கத்தின் கையில் சிக்கியிருக்கிறது என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளது! என்று சூடாக விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தேர்தல் அதிகாரியிடம் கெஞ்சும் வீடியோவில் ’எல்லார் வேட்புமனு மேலேயும் தானா முடிவெடுத்த நீங்க, எனக்கு மட்டும் ஏன் சார் எழுந்து போய் போன்ல பேசிட்டு வர்றீங்க? நான் அரசியலுக்காக தேர்தல்ல நிக்கல சார். மக்களுக்கு நல்லது பண்ண ஒரு முயற்சியா நிக்குறேன் அவ்வளவுதான். ப்ளீஸ் சார், மனிதாபிமானத்தோட முடிவெடுங்க.
என் மனுவுல என்ன தப்பு இருக்குதுன்னு சொல்லுங்க. ப்ளீஸ் சார், மனசு வையுங்க சார்.” என்று கெஞ்சுகிறார். அவருக்கு அருகிலிருக்கும் நபர் ‘கையெழுத்து போடுங்க சார், வேணும்னா உங்க கால்ல விழுறோம்.’ என்கிறார்.
இதையெல்லாம் வாய் மூடி, மெளனமாக, தலைகுனிந்து கேட்கும் உயரதிகாரி, விஷால் கெஞ்ச கெஞ்ச பேனாவை நோக்கி கையை நகர்த்துகிறார் பின் விலக்குகிறார். சுயமாக முடிவெடுக்க முடியாத சூழலில், ஏதோ ஒரு பிரஷருக்கு அவர் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அவர் இருப்பது இதன் மூலம் புரிகிறது...என்கிறார்கள் பார்வையாளர்கள்.
ஆக ஜனநாயக தேசத்தில் தேர்தலில் போட்டியிட தகுதியான யார் வேண்டுமானாலும் நினைத்தால் போட்டியிட்டுவிட முடியாது. அந்த நபரால் தனது வாக்குவங்கி பாதிக்கப்படும் என அதிகார வர்க்கம் நினைத்தால் அவரின் முயற்சியை முடக்கும் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
விஷாலின் மனு நியாயமான காரணங்களால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அவர் இப்படி கெஞ்சி சீன் போடும் போதும், அந்த காட்சி மொபைலில் பதிவு செய்யப்படும் போது அந்த அதிகாரிகள் சட்டென்று எழுந்து அவரது மனுவின் தவறுகளை சுட்டிக்காட்டி முகத்திலடித்தாற்போல் உண்மையை உடைத்து அவரை வெளியே அனுப்பியிருக்கலாமே. ஆனால் அதைவிடுத்து மெளனம் காத்ததும், செரிக்காத உணவை உண்டது போல் தவித்ததும் ஏன்? என்கிறார்கள்.
காழ்ப்புணர்வோடு என் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது! என்று இதுவரை பல வேட்பாளர்கள் புலம்பியுள்ளனர். அவர்களின் வாதத்தை விஷாலின் கெஞ்சல் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துவிட்டது. அனுமதித்தால் இவர் வென்று விடுவார் அல்லது தங்களின் வெற்றியை பெருமளவு பாதிப்பார் என்று ஒரு அதிகார வர்க்கம் நினைத்து, அவரை தடுக்கும்போதே அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்றே அர்த்தம்.
அந்தவகையில் ஆர்.கே.நகரில் போட்டியிடாவிட்டாலும் கூட வென்றிருப்பது விஷால்தான்!...என்கிறார்கள் விமர்சகர்கள்.