
’அணிகள் இணைந்து மூன்று மாதங்களாச்சு. ஆனால் மனங்கள்?’ என்று மைத்ரேயன் திரி கொளுத்தியதன் பின்னணியில் பழனிசாமி மற்றும் பன்னீர் தரப்புக்கு இடையில் நடக்கும் உச்சகட்ட உள் உரசல்களின் முகம் வெளிப்படையாய் புரிந்திருக்கிறது.
கோட்டையில் துணை முதல்வர் பன்னீருக்கும் பெரியளவுல மரியாதை இல்லை என்று அவரது அணியினர் புலம்பித் தவிக்கின்றனர். இதன் உச்சமாக கடந்த 30-ம் தேதி இரவில் பன்னீரை கோட்டைக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டார்கள் என்று கிளம்பியிருக்கும் தகவல் பதைக்க வைக்கிறது.
ஆம் பொதுவாக கோட்டையை விட்டுக் கிளம்பும்போது 4-ம் எண் கேட் வழியாகத்தான் பன்னீர் வெளியே வருவாராம். இது கோட்டையில் கேண்டீன் நடத்துபவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில் கடந்த 30-ம் தேதி இரவில் எட்டரையை தாண்டியும் கோட்டையிலேயே இருந்திருக்கிறார் பன்னீர்.
கோட்டையின் கதவுகளை அடைத்துக் கொண்டே வந்த செக்யூரிட்டி டீம் 4-வது எண் கேட்டையும் பூட்டிவிட்டு நகர்ந்துவிட்டது. ஒன்பது மணி வாக்கில் கோட்டையிலிருந்து வீட்டுக்கு கிளம்பிய பன்னீர், தனது ஆதரவாளர்கள் சிலருடன் பேசியபடி 4-ம் எண் கேட்டடை நோக்கி நடந்திருக்கிறார்.
அப்போதுதான் அவரது பாதுகாவலர்களுக்கு அது பூட்டப்பட்டு இருப்பது புரிந்தது. அவர்கள் அலைபாயும் நேரம் பன்னீர் கேட்டுக்கே வந்து நிலைமையை புரிந்துவிட்டார்.
இதற்குள் செக்யூரிட்டியை வரவழைத்த துணைமுதல்வரின் அதிகாரிகள் லெஃப்ட் ரைட்டு வாங்கியிருக்கின்றனர். பன்னீரோ ‘துணை முதல்வரோட கார் நிக்குது, பாதுகாவலர்கள் இருக்கிறாங்க. அப்படின்னா அவரு இங்கே இருக்கிறார்னு புரிஞ்சுக்க வேணாமா! இது கூட தெரியாம என்ன வேலை பார்க்குறீங்க? உங்களை இப்படி பண்ணச்சொன்னது யார்?’ என்று கடுப்பாய் கேட்டுவிட்டு கிளம்பிவிட்டாராம்.
இந்த விவகாரம் கோட்டையை உருட்டிவிட்டது. செக்யூரிட்டி டீமோ கோட்டை போலீஸ் மீது பொறுப்பை தூக்கி வைக்க, அவர்களோ செக்யூரிட்டிகளை பழித்திருக்கிறார்கள்.
இந்த பஞ்சாயத்து மூலம் கோட்டையில் துணை முதல்வருக்கு இருக்கும் செல்வாக்கு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் கோயமுத்தூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தனக்கு உரிய மரியாதை இல்லை என்பதை காரணமாக காட்டிவிட்டு அந்த விழாவை புறக்கணித்த பன்னீர் கன்னியாகுமரிக்கு புணரமைப்பு பணிகளை பார்வையிட சென்றுவிட்டார்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் வெள்ளப்பகுதிகளை பார்வையிடும் பன்னீரின் படம் எதுவும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் வழியே மீடியாக்களுக்கு போகவேயில்லையாம். பன்னீர் குமரி செல்லும் முன்பே அமைச்சர்கள் உதயகுமார், ஜெயக்குமார், தங்கமணி மூவரும் பிரஸ்மீட் நடத்தி எல்லா விஷயங்களையும் அப்டேட் செய்துவிட்டனராம். இதனால் பன்னீரின் பேட்டி கூட டம்மியாகி இருக்கிறது.
ஆக மொத்தத்தில் பன்னீரை அதிகாரம் மற்றும் செல்வாக்கு ரீதியில் ஓரங்கட்டும் காரியத்தை அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் டீம் மிக சரியாக செய்கிறது என்கிறார்கள்.
இதற்கெல்லாம் பன்னீரின் தரப்பு ரியாக்ட் செய்ய ஆரம்பித்தால் தர்மயுத்தம் சீசன் 2 ஸ்டார்ட் ஆவது உறுதி! என்கிறார்கள்.