
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் சங்கம் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில் சினிமா துறையை முதல்வர் எடப்பாடி காப்பாற்றி விட்டதாகவும் அதற்கு தாங்கள் நன்றி கடன் போட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு ஐஸ் மேல் ஐஸ் வைத்து முதலமைச்சருக்கு நடிகர்கள் கடிதம் அனுப்பியுள்ள விஷயம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
கேளிக்கை வரி entertainment tax-ஐ சினிமாவுக்கு விதிக்காமல் விட்டு விட்டதால் தமிழ் சினிமா தப்பித்து விட்டது என்கிறது நடிகர்கள் கூடாரம்.
ஏற்கெனவே GST வரி விதிப்பால் பாதிப்பு, திருட்டு விசிடி என சவால்களை சந்தித்து கொண்டிருந்த தமிழ் சினிமா துறைக்கு கேளிக்கை வரியை நீக்கியதன் மூலம் மிகப்பெரிய சுமை குறைந்துள்ளது என நடிகர் சங்கம் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் அமைச்சரகள் பெருமக்களும் இரண்டு நாட்களாக விவாதித்து முடிவில் திரைத்துறை சார்பில் ஒரு குழுவும் அரசு சார்பில் ஒரு குழுவும் அமைத்து இதனுடைய சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து அதன் பின் இந்த வரி விதிப்பை முடிவு செய்யலாம் என தீர்மானித்திருப்பது தங்களுக்கு பெரும் மகிழ்வை தருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி மட்டுமின்றி அமைச்சர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு சத்தமாக ஜால்ரா தட்டுவது என்பது தமிழ் திரை துறையினரின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஆகியோர் திரைத்துறையை காப்பாற்றிய தெய்வங்களாக தமிழ் திரை துறையினர் கூறி வந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அவர்களது புதிய பாதுகாவலராக அவர்களாலேயே தற்போது உருவாக்கப்பட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!