
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்து அது நிராகரிக்கப் பட்ட நிலையில் நடிகர் விஷால், தொடர்ந்து தனது ஏமாற்றத்தை புகாராக பிரதமரின் டிவிட்டர், குடியரசுத் தலைவர் மாளிகையின் டிவிட்டர் கணக்குகளில் இணைத்து டிவிடரில் பதிவிட்டார். தொடர்ந்து, அழுகுனி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விஷால், விடாப்பிடியாக இருப்பதால், அவரது வேட்புமனு மீண்டும் பரிசீலிக்கப் பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் முறையிட்டார் விஷால்.
தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் முறையிடப் போவதாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் விஷாலின் வேட்பு மனுவை மீண்டும் பரிசீலனை செய்ய வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக விஷாலை முன்மொழிந்ததாகக் கூறப்பட்டு, பின்னர் தாங்கள் முன்மொழியவில்லை என்று கூறப்பட்ட இரண்டு பேரும், இன்று மாலை 3 மணிக்குள் தேர்தல் அலுவலரை சந்தித்து நேரில் விளக்கம் அளிக்கும் பட்சத்தில், விஷாலின் வேட்பு மனுவை ஏற்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சோதனைக்கு அந்த இரு நபர்களும் வீட்டில் இல்லையாம். அவர்கள் நேற்றே தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களை எப்படியும் தேடிக் கண்டுபிடித்து தேர்தல் அலுவலர்முன் நிறுத்த தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள் விஷால் ஆதரவாளர்கள்.