
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் ஆட்சி செய்யவேண்டும் என்றும் விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து நடிகர் விஷால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நடிகர் விஷால் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர்.நடிகர் சங்க பொது செயலாளராக இருந்த போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டாவுக்கு ஆதரவாக பேசி பின்னர் அந்தர் பல்டி அடித்து டில்லிக்கு சென்று ஜல்லிகட்டுக்கு ஆதரவு என்பது போல் பரபரப்பை கிளப்பினார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் அப்போல்லோவுக்கு சென்ற பொது விஷால் மட்டும் செல்லவில்லை.
இது போன்று முன்னுக்கு பின் முரணாக சினிமாவில் ஒரு கால் அரசியலில் ஒரு கால் என்று கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துவது விஷாலின் வழக்கம்.
டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராடிய போது நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்தார்.
தற்போது விவசாயிகள் பிரச்னையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உத்தர பிரதேசம் பஞ்சாப் முதல்வர்களை உதாரணம் காட்டி பரபரப்பு கடிதம் ஒன்றை முதல்வர் எடப்பாடிக்கு எழுதியுள்ளார்.
அதில் நமது அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசத்திலும் மகாராஷ்ட்ராவிலும் விவசாய கடன்களை ரத்து செய்ததை அறிந்த பஞ்சாப் அரசும் விவசாயிகள் கடன்களை ரத்து செய்துள்ளது.
அதே போல் தாங்களும் நமது விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.