
கட்சியிலும், ஆட்சியிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட போராடி வரும் தினகரன், குடியரசு தலைவர் தேர்தலில், நெருக்கடி கொடுத்து மோடியுடன் சமரச ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று கணக்கு போட்டிருந்தார்.
சசிகலாவின் திட்டமும் அதுவாகத்தான் இருந்தது. அதன் காரணமாகவே, தினகரன் எம்.எல்.ஏ க்களை தம் பக்கம் அணி சேர்த்து, எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்ததை கண்டுகொள்ளாமல் இருந்தார் சசிகலா.
கட்சியில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏ க்கள் தினகரன் கட்டுப்பாட்டில் இருப்பதால், குடியரசு தலைவர் தேர்தலுக்காக வாக்குகளை பெற, அவரிடம்தான் பேசவேண்டும் என்று மோடியிடம், எடப்பாடியை பேச வைக்க வேண்டும் என்பதே சசிகலா குடும்பத்தின் திட்டமாக இருந்தது.
அப்படி ஆதரவு கேட்டு, பாஜக தரப்பு பேச வரும்போது, தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்று சசிகலா குடும்பம் கணக்கு போட்டு வைத்திருந்தது.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெரும் வகையில், தலித் ஒருவரை குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிக்கும் என்று சசிகலா குடும்பத்தினர் யாரும், கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
தற்போதைய நிலையில், தேசிய அளவில் பாஜக தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும் இருந்தாலும், இரு அணிகளையும் சாராத மூன்றாவது அணி ஒன்றும் உள்ளது.
இந்த மூன்றாவது அணியின் வாக்குகள், ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் அணிக்கு செல்வதற்கான வாய்ப்பு இல்லை. அதனால், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, பாஜக வேட்பாளருக்கு அதிமுகவின் ஆதரவை கோரியுள்ளார். இது தினகரனை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுகவின் தலைமை என்ற அங்கீகாரத்தை முதல்வர் எடப்பாடிக்கே, பிரதமர் மோடி வழங்கி இருக்கிறார் என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகி உள்ளது.
குடியரசு தலைவர் தேர்தலுக்காக, பாஜக தங்களிடம் ஆதரவு கேட்டு வரும் என்று கணக்கு போட்டு காய் நகர்த்தி வந்த தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தை, பிரதமர் மோடி மீண்டும் சீண்டும் வகையில் முதல்வர் எடப்பாடியிடம் ஆதரவு கேட்டுள்ளார் என்றே அவர்கள் நினைக்கின்றனர்.
இதன் மூலம், சசிகலா குடும்பம், பாஜகவை பணிய வைக்க போட்டு வைத்த திட்டங்களை பிரதமர் தவிடுபொடி ஆக்கி விட்டார்.
மேலும், தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ க்களில் பலர், பழகிய பாசத்திற்காகத்தான் அவரை சந்தித்து வருவதாக முதல்வர் எடப்பாடியிடம் கூறி வருகின்றனர்.
அத்துடன், சட்டமன்ற கூட்டங்களின்போது அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களும், பன்னீர்செல்வத்தை அடிக்கடி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இவை அனைத்தும், மோடி அறிவுறுத்தலின் பேரிலேயே நடைபெறுவதாகவே சசிகலா குடும்பத்தினர் நினைக்கின்றனர்.
எனவே, குடியரசு தலைவர் தேர்தல் முடிந்தவுடன், பிரதமர் மோடி ஆதரவுடன், அதிமுகவின் இரு அணிகளும் இணைக்கப்படும்போது, , சசிகலா குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக, அரசியலை விட்டு விலக்கப்பட நேரும் என்று சசிகலா குடும்பம் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.
மேலும், ஆட்சி கவிழ்த்துவிட கூடாது என்ற அச்சத்தில், தற்போது தினகரன் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ க்களும், எடப்பாடி பக்கம் வந்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு, தொடர்ந்து தங்களை மீண்டும் மீண்டும் சீண்டி வரும் பிரதமர் மோடியை, எப்படி சமாளிப்பது என்பது குறித்தே, தற்போது ஒட்டுமொத்த மன்னார்குடி உறவுகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகிறது.