
அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு கட்ட குழப்பங்களும் அதிர்வலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இரட்டை இலை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய தினகரனை கட்சியில் சேர்க்க கூடாது என எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.
ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவிக்கு அதிமுகவை சேர்ந்த 34 எம்எல்ஏக்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் கட்சி பொறுப்பிலிருந்து தினகரனை நீக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் பேட்டி அளித்து வருகின்றனர்.
இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ சரவணன் கூவத்தூர் பேரம் குறித்த வீடியோ ஒன்றையும் ஆங்கில தொலைகாட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இணைவதாக இருந்த பன்னீர் செல்வம் அணியும் எடப்படியை விட்டு விலகி சென்றுள்ளது.
இந்நிலையில், மக்களவை துணை தலைவர் தம்பிதுரை, இன்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் நடைபெறுவதையொட்டி யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என அறிந்து கொள்ள, அவர் சந்தித்தாரா அல்லது இரு அணிகள் இணைவது குறித்து பேசினாரா என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.
சசிகலாவை தம்பிதுரை சந்தித்த போது தினகரன் சிறை வளாகத்தில் காத்திருந்தார்.
பின்னர் தம்பிதுரை சென்றதும் சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தினகரன் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சசிகலாவை மூன்றாவது முறை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.