
’அந்த 3 பேரா இவுக? நம்பவே முடியலையேடா நாராயணா?’ _ என்று ஆச்சரிய அதிர்ச்சியில் உறைகிறது தமிழகம். இத்தனை நாட்களாக மானிய கோரிக்கை தொடர்பான ஆவணங்களுக்குள், எடப்பாடி அமைச்சரவைக்கு ஆதரவாக ‘ஜங்! ஜக்! என ஒலி எழுப்பும் பக்கவாத்திய கருவியையும் மறைத்துக் கொண்டு போன தமீமுன் அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் ஆகிய மூன்று பேரும் இன்று வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் என்றால் அது பெரும் அதிர்ச்சிதானே!?
மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தாங்கள் வெளிநடப்பு செய்ததாக அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இது உண்மையில்லை இதற்கு பின்னால் வேறொரு பெரும் அரசியலிருக்கிறதி என்று வலுவாக விமர்சிக்கப்படுகிறது.
அதைப்பார்ப்போம்...
மிக மிக துல்லியமாக தமிழகத்தின் அரசியல் சூழல் மாறி வருகிறது. சற்றே அழுத்தமாகவும், வெளிப்படையாகவும் சொல்வதானால் எடப்பாடி அரசின் ஸ்திரத்தன்மை கிடுகிடுக்க துவங்கிவிட்டது. இனி அடுத்தடுத்த நாட்களில் ஆட்சிக்கு எதிரான மிகப்பெரும் பூகம்பங்கள் கிளம்புவதை தமிழக காண நேர்ந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இது பற்றி அவர்கள் மேலும் விரிவாக கூறுவதென்ன?...
”இந்த ஆட்சி கரைசேராது, இந்த ஆட்சிக் கப்பல் விரைவில் தரைதட்டிவிடும்! என்றெல்லாம் எதிர்க்கட்சிகளின் பேச்சாளர்கள் வசைமாரி பொழிந்தபோது, இது வழக்கமான அரசியல்தானே என்று சாமானியர்களுக்கு எண்ணம் எழுந்திருக்கலாம்.
ஆனால் தி.மு.க. மிக தெளிவாக அ.தி.மு.க. அரசுக்கு எதிராக காய் நகர்த்த துவங்கியிருந்தது. படிப்படியாக ஆட்சிக்கு ஆதரவான விஷயங்களை பேர்த்தெடுப்பது என்பதில் குறியாக இருந்தார் ஸ்டாலின்.
ஸ்டாலினின் பார்வையில் முதலில் உறுத்தலாக தெரிந்த விஷயங்கள்...அ.தி.மு.க. அமைச்சர்களோ அல்லது எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.க்களோ அல்ல. இந்த ஆட்சிக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கின்ற, அதன் கூட்டணி இயக்கங்களை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள்தான்.
என்னதான் எடப்பாடி அணிக்கு எதிராக முறுக்கிக் கொண்டு நின்றாலும் கூட பன்னீர் அணி மற்றும் தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு எதிராக வெளிப்படையாக அவ்வளவு சீக்கிரம் வந்துவிட மாட்டார்கள் என்பது ஸ்டாலினின் கணிப்பு. அதனாலதான் அந்த 3 எம்.எல்.ஏ.க்களை தட்டிவிட நினைத்தார். மிக தெளிவாக இன்ச் பை இன்ச்சாக காய் நகர்த்தினார்.
இந்த நேரத்தில் எல்லா சூழலும் ஸ்டாலினுக்கு சாதகமாகவே அமைந்தது. மூன் டி.வி.யின் வீடியோ ஆதாரங்கள் ஸ்டாலினுக்கு பிரம்மாஸ்திரமாக வந்து அமைந்தன. பேரவை துவங்கிய நாளில் இருந்து அந்த விவகாரத்தையே மீண்டும் மீண்டும் ஸ்டாலின் கிளப்பியதும், வெளிநடப்பு செய்ததும் பார்ப்பவர்களுக்கு எரிச்சலை தந்திருக்கலாம். ஆனால் ஸ்டாலின் மிக தெளிவாக அந்த காரியத்தை செய்ததில் ஒரு பின்னணி இருக்கிறது.
ஸ்டாலின் ஒவ்வொரு முறை அந்த சி.டி. விவகாரத்தை சட்டமன்றத்தில் கிளப்பிய போதும், வெளியே வந்து மீடியாவிடம் சி.டி.யை தூக்கிப்பிடித்து பேட்டி கொடுத்தபோதும் காற்றில் பறந்தது அ.தி.மு.க.வின் மானமில்லை. ஆதரவு எம்.எல்.ஏ.க்களான அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோரின் மானம்தான். காரணம், என்னதான் பணம் வாங்கிவிட்டு ஓட்டு போட்டாலும் கூட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பொறுத்தவரையில் அது அவர்களின் உட்கட்சி கொடுக்கல் வாங்கல் என்று பெயராகி போகும். ஆனால் இவர்கள் 3 பேரை பொறுத்தவரையில் இது வாழ்நாள் அசிங்கம்.
ஸ்டாலின் முக்கியமாக குறிவைத்தது தமீமுன் அன்சாரியைத்தான். காரணம் சென்சிடீவான பின்புலத்தை உடைய இயக்கத்தை சேர்ந்தவர். ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கையில் நேர்மை என்பவற்றுக்கு அதிக அழுத்தம் தரப்படும் அமைப்பென்பதால், சி.டி. விவகாரத்தை வைத்து குத்திக் கொண்டே இருந்தால் நிச்சயம் வெளியே வந்துவிடுவார் அன்சாரி என்று எதிர்பார்த்தார். அது அப்படியே இன்று நடந்திருக்கிறது.
தனியரசுவை பொறுத்தவரையில் என்னதான் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக நின்றாலும் கூட அவரது மனசெல்லாம் தினகரனின் பக்கம்தான் இருக்கிறது என்பதை தி.மு.க. துல்லியமாக கணக்கெடுத்திருந்தது. ‘கட்சியை பிடித்திருக்கும் காய்ச்சல் தீர தினகரன் ஊசி மருந்தே சரியானது.’ என்று அவர் கொடுத்திருந்த பேட்டி ஸ்டாலின் தரப்பை உற்சாகப்படுத்தியிருந்தது.
ஆக பணம் வாங்கிக் கொண்டே கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடிக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்கிற வாதத்தை மீண்டும் மீண்டும் வைத்தால் கொங்கில் ஆதரவு வைத்திருக்கும் தனியரசுக்கு இது மிகப்பெரிய தலைவலியாய் அமையுமென்பது அவரது கணக்கு. கூடவே காரியவாதியான தனியரசு விமர்சனங்களால் குடைசாயும் எடப்பாடி அணியை அதிக நாள் ஒட்டியிருக்க மாட்டார் என்றும் தீர்மாணித்தார் ஸ்டாலின். ஆக அவரை நெம்பி வெளியே எடுக்கும் வகையிலும் சி.டி. வழியே விமர்சனங்களை வைத்தார்.
கருணாஸை பொறுத்தவரையில் சசி அணி, எடப்பாடி அணி என இரண்டு பக்கமும் கோல் போடக்கூடியவர். தனியரசு போல் காரியவாதியான இவரையும் அதே ரூட்டில் அடித்தார் ஸ்டாலின்.
இப்படி தொடர் டார்ச்சர் கொடுத்ததன் விளைவாக இன்று மூன்று பேரும் சட்டமன்றத்தை விட்டு பொந்திலிருந்து வெளியேறிய எலிகளை போல் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.
ஸ்டாலினே எதிர்பாராத வகையில் நேற்று தினகரன் ஆதரவு அணியின் தளபதியான தங்கத்தமிழ் செல்வனின் சபாநாயகருக்கு எதிரான கோபமும், வெளிநடப்பும் ஸ்டாலினுக்கு குதூகலத்தை தந்தன. வெளிநடப்பின் மூலம் கிடைக்கும் மீடியா புகழை ஒரு முறை சுவைத்விட்ட தங்கத்தமிழ் இனி அடிக்கடி தன் அணியுடன் இந்த வேலையை செய்வார் என்பது தி.மு.க.வின் கணிப்பு. தங்கத்தமிழ்செல்வனின் சபாநாயகருக்கு எதிரான வெளிநடப்பை, ஆட்சிக்கு எதிரான வெளிநடப்பாக மாற்றி பிரச்சாரம் செய்து ஸ்கோர் செய்தது தி.மு.க.வின் சாமர்த்தியம்.
இப்படியான காரியங்களால் எடப்பாடி அரசுக்கு எதிரான போர் மேகங்கள் வரிசை கட்டி முழங்க துவங்கிவிட்டன. தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு ஆளுங்கட்சி இப்படியான சூழலை சந்திப்பது இதுவே முதல் முறை. மைனாரிட்டி பலத்துடன் அமைந்த அரசு ஒரு கட்டத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் மெஜாரிட்டியுடன் அமர்ந்த அரசு, உள்கட்சி பிரச்னைகளால் இப்படி கிடுகிடுக்க துவங்கியிருப்பது எடப்பாடியின் காலத்தில்தான்.
என்னதான் ‘மாட்டிறைச்சி விவகாரத்தில் முதல்வரின் பதில் திருப்திகரமாக இல்லை.’ என்று மூன்று எம்.எல்.ஏ.க்களும் பூசி மெழுகி வெளிநடப்பு செய்தாலும் இதை மக்கள் நம்ப தயாராக இல்லை. மாட்டுக்கறி தடையை அன்சாரி எதிர்ப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் தனியரசுவும், கருணாசும் எதிர்ப்பதில் லாஜிக் இடிக்கிறதே!
ஆக இவர்களின் வெளிநடப்புக்கு மாடு காரணமில்லை இதற்கு பின் இருக்கும் எதிர்க்கட்சி தந்திரப்புலிகள்தான் காரணமென்பது மக்களுக்கு உடனடியாக புரியும்.
இத்தனை நாட்களாக தங்களுக்குள் முரண்பாடு இருந்தாலும் கூட ஆட்சியை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டனர் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள். ஆனால் நேற்றில் இருந்து அந்த சூழல் மாறிவிட்டது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 89 பேர், தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேர், மாட்டுக்கறியை மையப்படுத்தி அரசுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியிருக்கும் 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பன்னீர் அணி எம்.எல்.ஏ.க்கள் என்று ஆட்சியின் நம்பிக்கைக்கு எதிரான வாக்குகளின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்திருப்பது எடப்பாடி அரசை ஏகபோகமாக அசைத்திருக்கிறது என்பதே யதார்த்தம்.
முழுக்க முழுக்க தி.மு.க.வுக்கு சாதகமாக திரும்பியிருக்கும் இந்த சூழல் இப்படியே தொடர்ந்து ஆட்சி கவிழுமா என்பதும் சந்தேகமே. காரணம், டெல்லி லாபியானது எடப்பாடி அரசு தொடர வேண்டும் என்று விரும்பினால் அந்த 3 எம்.எல்.ஏ.க்களையும், பன்னீர் தரப்பையும் அடக்கி வைப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. தேவைப்பட்டால் தினகரன் தரப்பையும் கூட சமாதானம் செய்யும் நேக்கு தெரியும் அவர்களுக்கு.
ஆக சுவற்றின் மேலிருக்கும் பூனை இங்கே பாயுமா அல்லது அங்கே பாயுமா என்பதுதான் தற்போதைய சூழல். இதன் மூலம் தினம் தினம் நித்ய கண்டமாகி போயிருக்கிறது எடப்பாடி அரசுக்கு.