
நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் அலறி அடித்து ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார்.
இப்போது ஆர்.கே.நகர் தேர்தல்தான் சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. தேர்தலில் யார் போட்டியிடுவார்கள், யார் கூட்டணி என்றெல்லாம் பொதுத் தளங்களில் விவாதங்களும் களை கட்டியுள்ளன. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்குவது, ரஜினி அரசியலில் குதிப்பது என்றெல்லாம் பரபரப்பான செய்திகள் ஓடிக் கொண்டிருக்கும் போது, விஜய்க்கு போட்டியாக விஷாலும் அரசியல் களத்தில் குதிக்கக் கூடும் என்று ஒரு செய்தியும் உலாவந்தது.
இந்நிலையில் வரும் டிச.21ம் தேதி ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் என்பதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதில், கமல்ஹாசன் ஆதரவுடன் விஷாலும் போட்டியிடுவார் என்று ஒரு செய்தி உலா வந்தது. குறிப்பாக, நடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் இயக்கத்தின் வலிமையை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தை வைத்து சோதிக்கக் கூடும், அதுவும் விஷாலைக் களமிறக்கி என்றெல்லாம் வதந்திகள் உலா வந்தன. ஏதேனும் ஒரு சிறு துளியாவது உண்மையிருந்தால்தான், இப்படி எல்லாம் பெரிதாக வதந்திகளும் பரவும் என்று கூறப்பட்டது.
இதனால், ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் களம் இறங்குவார், அவர் இன்று தான் போட்டியிடுவது குறித்து அறிவிப்பார் என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகத் தகவல் பரவியது.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று தனது நிலையை அறிவித்த விஷால், தான் ஆர்.கே.நகரில் போட்டியிடப் போவதாக வருவது எல்லாம் வதந்திதான் என்றும், தனக்கும் கட்சி அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் ஒரேயடியாக ஓட்டம் பிடித்தார்.
இப்படியாக, “ஆர். கே. நகரில் போட்டியில்லை” என்று கூறிய விஷால்,
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டி என்ற திடீர் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்!