விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக பிரபாகரராஜாவை அறிவித்துள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தனசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக பிரபாகரராஜாவை அறிவித்துள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தனசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக பிரபாகரராஜாவை அறிவித்துள்ளதை எதிர்த்து திமுக தலைமை செயற்குழு தலைவர் தனசேகரன் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்து இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ராஜினாமா கடிதம் அளித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தனசேகரன்;- விருகம்பாக்கம் தொகுதிக்கு பிரபாகரராஜாவை வேட்பாளராக அறிவித்துள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் மறு பரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் ஸ்டாலின் தன்னை கை விடமாட்டார் என நம்புவதாகவும் தெரிவித்தார். பிரபாகர்ராஜா அதிமுகவுடன் இணக்கமாக இருந்தவர் என்றும் அவரின் இல்ல திருமண விழாவிற்கு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களை அழைத்திருந்ததை சுட்டிக் காட்டினார்.
தனது குடும்பத்தினர் திமுகவில் பொருப்புகளை வகித்து வருவதாகவும், திமுக விசுவாசிகள் எனவும் கூறிய அவர், தனது மனைவி சூரியன் சின்னம் பொறித்த தாளியை அணிந்துள்ளதாகவும், அந்தளவிற்கு கட்சிக்கு விசுவாசமானவர்கள் எனவும் கூறினார். தனது ராஜினமா கடிதத்தை திமுக அமைப்பு செயலாளரிடம் வழங்கி உள்ளதாகவும் மறு பரிசீலனை செய்வதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தான் திமுக விற்கு துரோகம் செய்ய மாட்டேன் என்றும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.