உட்கட்சி மோதல்..! ஜாதி பலம்..! விருதுநகரில் தள்ளாடும் கழகங்கள்..! முந்தும் அமமுக..!

By Selva KathirFirst Published Mar 22, 2021, 10:06 AM IST
Highlights

தமிழகத்தில் கோவில்பட்டிக்கு பிறகு அமமுக வேட்பாளருக்கு சாதகமான ஒரு தொகுதி இருக்கிறது என்றால் அது விருதுநகர் தான் என்கிறார்கள்.

தமிழகத்தில் கோவில்பட்டிக்கு பிறகு அமமுக வேட்பாளருக்கு சாதகமான ஒரு தொகுதி இருக்கிறது என்றால் அது விருதுநகர் தான் என்கிறார்கள்.

விருதுநகர் தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ சீனிவாசன் மறுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமமுக சார்பில் இந்த தொகுதியில் கோகுலம் தங்கராஜ் போட்டியிடுகிறார். விருதுநகர் தொகுதி நாடார்கள், தேவர்கள் மற்றும் நாயக்கர்கள் கணிசமாக வசிக்கும் தொகுதியாகும். இதே போல் இந்த தொகுதியில் வியாபாரிகள் அதிகம் உள்ளனர். கடந்த தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் விருதுநகருக்கு நேரடியாக வந்து வியாபாரிகளை சந்தித்து பேசினார்.

இதனால் அவர் மீது நம்பிக்கை வைத்து கடந்த தேர்தலில் வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் திமுகவை ஆதரித்தனர். ஆனால் திமுக வெற்றி பெற்று ஐந்து வருடங்களாக எம்எல்ஏவாக இருந்த சீனிவாசன் தொகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து தரவில்லை என்கிறார்கள். விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன் சட்டப்பேரவையில் பேசியே நாங்கள் பார்த்தது இல்லை என்கிறார்கள் அந்த தொகுதியை சேர்ந்தவர்கள். மேலும் எதிர்கட்சி எம்எல்ஏவான சீனிவாசன் தொகுதி மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற ஒருபோராட்டமோ, ஆர்பாட்டமோ கூட செய்ததில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் சீனிவாசன் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் கடந்த முறை அவருக்கு ஆதரவு அளித்தவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. இதே போல் திமுகவில் உள்ள இரண்டு மாவட்டச் செயலாளர்களும் சீனிவாசனை கண்டுகொள்வதில்லை என்கிறார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆரும் சரி தங்கம் தென்னரசுவும் சரி தங்கள் தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். மேலும் விருதுநகரில் உள்ள திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பிரச்சாரம், தேர்தல் பணி என்று அமைச்சர்களின் தொகுதிகளுக்கு சென்று முகாமிட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் பாண்டுரங்கன் என்பவர் வேட்பாளராகியுள்ளார். கடந்த 2001ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் பாஜக விருதுநகரில் வெற்றி பெற்று இருந்தது. எனவே இந்த முறை மறுபடியும் அந்த தொகுதியை கேட்டு வாங்கியுள்ளது பாஜக. ஆனால் அதிமுக மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான அதிருப்தியால் அதிமுகவினர் தற்போது வரை பாஜக வேட்பாளருக்காக தேர்தல் பணிகளை தொடங்கவில்லை. இதனால் பாஜக வேட்பாளர் முகாம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

அதே சமயம் விருதுநகரில் அமமுக சார்பில் போட்டியிடும கோகுலம் தங்கராஜ் தேர்தல் ரேஸில் தற்போது முன்னிலையில உள்ளது கண்கூடாக தெரிகிறது. தேர்தலுக்கு முன்பிருந்தே கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என ஆன்மிகம் தொடர்புடைய எந்த விஷயமாக இருந்தாலும் கை நிறைய அள்ளிக் கொடுக்கும் பழக்கம் கொண்டவர் கோகுலம் தங்கராஜ் என்கிறார்கள். அதோடு விருதுநகர் தொகுதியில் தனது சொந்த காசை பயன்படுத்தி நிறைய நலத்திட்டங்களையும், ஏழைகளுக்கு உதவியையும் செய்து வருவதாக கூறுகிறார்கள். இதனால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆர்வமாக வரவேற்பதை காண முடிகிறது. இது தவிர முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த கோகுலம் தங்கராஜை அந்த சமுதாயத்தினர் முழு அளவில் ஆதரிக்கின்றனர்.

நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்களில் ஒரு தரப்பில் திமுக வேட்பாளர் மீது  உள்ள அதிருப்தியால் கோகுலம் தங்கராஜை ஆதரிப்பதாக சொல்லப்படுகிறத- இதே போல் சட்டப்பேரவை தேர்தலில் விருதுநகரில் கோகுலம் தங்கராஜை ஆதரிப்பது என்று விருதுநகரில் உள்ள நாடார் உறவின் முறைகள் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இதனால் விருதுநகர் தொகுதியில் போட்டி என்பது அமமுகவிற்கும் – திமுகவிற்கும் தான் என்கிற நிலை உருவாகியுள்ளது. அத்தோடு, தேர்தல் பணிகள், பணப்பட்டுவாடாக்கள் போன்றவற்றில் திமுக வேட்பாளரை பின்தள்ளி கோகுலம் தங்கராஜ் முன்னிலையில் உள்ளதாக கூறுகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் கோவில்பட்டிக்கு பிறகு அமமுகவிற்கு நம்பிக்கை அளிக்கும் தொகுதியாக விருதுநகர் உருவாகியுள்ளது.

click me!