
தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது. பிரதானப் போட்டி திமுக - அதிமுக கூட்டணி இடையே இருந்தாலும், மற்ற கட்சிகள் எதிர்ப்பு ஓட்டுகளை சிதறடிக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எப்போதும் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிராக எதிர்ப்பு ஓட்டுகள் உருவாவது இயல்பு. அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுக ஆட்சியில் உள்ள நிலையில், இயல்பான எதிர்ப்பு ஓட்டுகள் உருவாகும் என்பதே யதார்த்தம்.
பெரும்பாலும் இந்த எதிர்ப்பு ஓட்டுகள் பிரதான எதிர்க்கட்சிக்கு செல்வது வழக்கம். இந்த ஓட்டுகள் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு இருக்கும். எனவேதான் எதிர்க்கட்சிகள் இந்த ஓட்டுகளைக் கைப்பற்ற ஆர்வம் காட்டும். இந்தத் தேர்தலில் எதிர்ப்பு ஓட்டுகள் தங்களுக்குக் கிடைக்கும் என திமுக எதிர்பார்த்தது. ஆனால், களத்தில் மக்கள் நீதி மய்யம், அமமுக கூட்டணி, நாம் தமிழர் என மற்ற கட்சிகளும் போட்டியிடுவதால், அந்தக் கட்சிகளுக்கும் எதிர்ப்பு ஓட்டுகள் செல்லும் வாய்ப்புகள் உண்டு. எனவே, இந்த எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிவிடுமோ என்ற அச்சத்தில்தான் தற்போது திமுக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுகவில் விசாரித்தபோது, “தற்போதைய சூழலில் மும்முனை போட்டி காரணமாக எதிர்ப்பு ஓட்டுகள் பிரியும் என்பது கண்கூடு. இந்த எதிர்ப்பு ஓட்டு பிரிப்பு திமுகவின் வெற்றியைத் தடுக்கும் காரணியாக இருக்கலாம். கடந்த 2006-இல் புதிதாக களத்துக்கு வந்த தேமுதிகவால் 25 தொகுதிகளில் திமுகவின் வெற்றி தடைப்பட்டது. இதனால், மைனாரிட்டி ஆட்சி என்ற அவப்பெயருடன் ஆட்சி நடத்த வேண்டியிருந்தது. பாமக, மக்கள் நலக் கூட்டணி காரணமாக 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக 2000-க்கும் குறைவான வாக்குகளில் தோல்வியடைந்தது. இது திமுக ஆட்சிக்கு வராமல் தடுத்தது. திமுகவைவிட 1.1 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெற்ற அதிமுக ஆட்சியைப் பிடித்தது என்பதை மறக்கவில்லை” என்கின்றனர் திமுகவினர்.
இதுபோன்ற நிலைமை ஏற்படக் கூடாது என்பதற்காக திமுக மண்டல வாரியாக நிர்வாகிகளை நியமித்து, தீவிர தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதன்படி தென் மண்டலத்தில் கனிமொழி, மத்திய மண்டலத்தில் திமுக எம்.பி. சண்முகம், வடக்கு மண்டலத்துக்கு ஜெகத்ரட்சகன், மேற்கு மண்டலத்துக்கு தயாநிதி மாறன், சென்னை மண்டலத்துக்கு ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தொகுதிகளுக்கும்கூட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் தனி பொறுப்பாளர்களாக திமுக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.