பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வுக்கு பாஜக அரசு பொறுப்பல்ல.. தேர்தல் பிரசாரத்தில் நடிகை கவுதமி விளக்கம்.!

By Asianet TamilFirst Published Mar 21, 2021, 9:46 PM IST
Highlights

காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக பொறுப்பல்ல. அதேபோல மத்திய அரசு மட்டுமே காரணம் அல்ல என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் பெட்ரோ, டீசல், காஸ் சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எரிபொருள் விலை உயர்வு பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி பாஜகவை திணறடித்து வருகின்றன. தேர்தல் பிரசாரத்தில் எரிபொருள் விலை உயர்வு முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதால், பாஜகவினர் அதற்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை கவுதமி பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


அப்போது கவுதமி கூறுகையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. பாஜக தலைவர்களின் கொள்கைகளைப் பார்த்துதான் 24 ஆண்டுகளுக்கு முன்பே பாஜகவில் நான் இணைந்தேன். இந்தியாவுக்கு ஏற்ற கட்சி பாஜகதான். அதனால்தான் அக்கட்சியில் இணைந்தேன். புதுச்சேரியில் நியாயமான ஓர் ஆட்சி தேவைப்படுகிறது. அந்த ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியால்தான் கொடுக்க முடியும். இந்த ஆட்சியால் புதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் அமையும்.


காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக பொறுப்பல்ல. அதேபோல மத்திய அரசு மட்டுமே காரணம் அல்ல. மாநில அரசுகளுக்கும் பொறுப்புள்ளது. இதுபற்றி பொருளாதாரம், நிதித் துறை சார்ந்தோரிடம் கலந்து பேசினால் தெளிவு கிடைக்கும். விலை உயர்வு பற்றி இப்போது எதுவும் பேச வேண்டியதில்லை. மக்களுக்கு எல்லாம் தெரியும்” என்று நடிகை கவுதமி பேசினார். 

click me!