
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பத்மாவதி’ திரைப்படத்திற்கு எதிராக ராஜஸ்தான், குஜராத் மற்றும் ம.பி. ஆகிய பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களை சேர்ந்த ராஜபுத்ர சமூகத்தினர் போராடி வருவதும், தீபிகாவின் மூக்கு மற்றும் தலையை வெட்டி வருபவர்களுக்கு கோடி கோடியாய் பணம் தரப்படும் என்று அறிவித்திருப்பதும் நாடறிந்த சேதி.
பத்மாவதி திரைப்படத்துக்கு ஆப்படிக்கும் போராட்டத்தில் பி.ஜே.பி.யின் முக்கியஸ்தர்கள் சிலரும் முன்னணியில் இருப்பதால் அக்கட்சியின் பெயர் டேமேஜ் ஆகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பி.ஜே.பி.யை சேர்ந்த சீனியர் தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு நேற்று டெல்லியில் நடந்த இலக்கிய விழா ஒன்றில் இந்த விவகாரம் பற்றி பேசி, போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்க கலந்த அறிவுரை வழங்கியிருக்கிறார். அவர் சொல்லியிருப்பவற்றில் ஹைலைட்ஸ் பாயிண்ட்ஸ் இதோ...
* எதிர்ப்புக்குரிய படங்களில் நடித்திருப்பவர்களை தாக்கினால் பணம் தரப்படும் என்று சிலர் அறிவிக்கின்றனர்! இவர்களிடம் அந்தளவுக்குபணம் உள்ளதா, இல்லையா என்பதே சந்தேகத்துக்குரியது. ஒவ்வொருவரும் கோடிக்கணக்கான ரூபாயை பரிசாய் அறிவிக்கின்றனர். ஒரு கோடி ரூபாய் வைத்திருப்பது அத்தனை எளிதான விஷயமா?
* இந்த மாதிரியான விஷயங்களை ஜனநாயகத்தில் ஒருபோதும் ஏற்க முடியாது.
* விரும்பத்தகாத விஷயங்களுக்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று அதை சொல்லுங்கள்.
* எதையும் நேரடியாக முடக்க துடிப்பதோ, பயங்கர மிரட்டல்களை விடுப்பதோ ஏற்கத்தக்கதல்ல. நாம் விதிகளை மீறவே கூடாது.
* ஒரு குறிப்பிட்ட படத்தை எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அதை மதத்துடன் தொடர்பு படுத்தி பேசுவது தவறு. மதத்துக்கும், கலாச்சாரத்துக்கும் வித்தியாசம் உள்ளது.
* மதம் என்பது வழிபாட்டு முறை! ஆனால் கலாச்சாரம் என்பது வாழும் முறை!
- என்று சொல்லி அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால் வெங்கய்யா நாயுடு அறிவுரை கூறிய அதேநாளில் ஹரியானா பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரான சூரஜ்பால், “மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவிற்கு வரும்படி பத்மாவதி திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது, ராமரின் சகோதரர் லட்சுமணன் பிறந்த பூமி! என்பதை மம்தாவுக்கு சொல்ல விரும்புகிறேன்.
ராமாயணத்தில், தீங்கிழைத்த சூர்ப்பனகைக்கு லட்சுமணன் என்ன தண்டனை அளித்தார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. மம்தா பானர்ஜிக்கும் சூர்ப்பனைக்கு நேர்ந்த கதி ஏறப்படும்.” என்று பட்டாசு கிளப்பியிருக்கிறார்.
இது வெங்கய்யா நாயுடுவின் கவனத்துக்கு போக, அவர் நொந்தேவிட்டாராம்.