ஜெயலலிதா அரசாள்கையில் அமைச்சர்கள் எந்தளவுக்கு கட்டுப்பெட்டிகளாக இருந்தார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. தங்கள் துறை சார்ந்த, நயா பைசாவுக்கு ஈடில்லாத திட்டமாக இருந்தாலும் கூட ‘அம்மா அவர்களின் உத்தரவுப்படி! அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க!’ என்று சொல்லுவார்களே தவிர தங்கள் பெயரின் ஒரு எழுத்து கூட வெளியாகாமல் பார்த்துக் கொள்வார்கள்.
ஆனால் ஜெ., மறைவுக்குப் பின் மந்திரிமார்களின் வாய் எந்தளவுக்கு நீண்டிருக்கிறது என்பதையும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதில் சில மந்திரிகள் தத்துப்பித்தென உளறிவைப்பதால் ஒட்டுமொத்த அமைச்சரவைக்கு ஏற்படும் இழுக்கும் கொஞ்சநஞ்சமில்லை.
இந்நிலையில் இன்று கோயமுத்தூர் சிட்டியில் மாநில இளைஞர்/இளம்பெண் பாசறையின் துணை செயலாளர் விஷ்ணு பிரபு ஒரு போஸ்டரை ஒட்டியிருக்கிறார். அம்மாவட்டத்தை சேர்ந்தவரும் எடப்பாடிக்கு அடுத்த அதிகார மையமுமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வாழ்த்தோ வாழ்த்தென வாழ்த்தி ஒட்டப்பட்டிருக்கும் அந்த போஸ்டர் எடப்பாடியையே கடுப்பாக்கி இருக்கிறதாம். காரணம் அதிலுள்ள வரிகள் அப்படி!
“இரட்டை இலை துளிர்த்தது
காரணம்
அணிகள் இணைந்தது
காரணம்
S.P.வேலுமணி அவர்களின் முயற்சியால்
வெற்றி! வெற்றி! வெற்றி!”
- என்றிருக்கிறது அந்த போஸ்டர்.
undefined
மாநில உளவுத்துறை போலீஸ் மூலம் இந்த விஷயம் முதல்வர் எடப்பாடியாரை சென்றடைய அவர் கடுப்பேறிவிட்டாராம். அவர் கழகத்தின் சீனியர்கள் சிலரை அழைத்து இதுபற்றி பேச, அவர்களோ வேலுமணிக்கு போன் போட்டு “கட்சிக்கு நல்ல விஷயங்கள் நடந்திருக்குது. சந்தோஷமே. ஆனா இலை துளிர்த்ததும், அணிகள் இணைந்ததும் உங்கள் முயற்சியாலதான் போஸ்டர் ஒட்டியிருக்காங்களாமே! இதோட உள் அர்த்தம் என்ன?
கழக வளர்ச்சியில உங்களோட பங்கு சிறப்பானதுதான். ஆனா முதல்வர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிட்டு நீங்க மட்டுமே இந்த வெற்றிகளுக்கெல்லாம் காரணம் அப்படிங்கிற மாதிரி உங்க மாவட்டத்துக்காரர் போஸ்டரடிக்க வேண்டிய காரணமென்ன?” என்று விலாவாரியா விளாசி கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு “ஏதோ ஆர்வக்கோளாறுல அந்த தம்பி இப்படி போஸ்டர் ஒட்டிட்டாரு. நான் என்ன? ஏதுன்னு விசாரிக்கிறேன். நீங்க ஏனுங்ணா டென்ஷனாகுறீங்க?” என்று கேட்டு அவர்களின் வாயை அடைத்துவிட்டாராம். அவர்கள் இதை அப்படியே தலைமைக்கு பாஸ் செய்திருக்கிறார்கள். கேட்டு அவரும் செம அப்செட்.
இந்நிலையில், முதல்வருக்கு இந்த போஸ்டரை பற்றி உளவு சொன்ன உளவுத்துறை போலீஸ் துணை முதல்வருக்கும் அப்படியோ ஒரு நகலை அனுப்பிவிட்டது. பன்னீரோ, அந்த போஸ்டரின் பின்னணியில் எடப்பாடி கோஷ்டிக்குள் வெடித்துள்ள விரிசலையும் ஸ்மெல் செய்துவிட்டு ரசிக்க துவங்கியிருக்கிறாராம். கூடவே தன் அணியின் முக்கியஸ்தர்களுக்கும் இந்த தகவலை ஃபார்வேர்டு செய்திருக்கிறார். இதை கேள்விப்பட்டு, ’இதற்குதானே ஆசைப்பட்டாய் மைத்ரேயா!’ என்று பன்னீர் தரப்பை சேர்ந்த ஒரு சீனியர் மாஜி மைத்ரேயனுக்கே மெசேஜ் அனுப்பி சிரித்தாராம்.
ஜெயிலுக்குள் இருந்து சசிகலாவும், வெளியிலிருந்து தினகரனும் கொடுத்த டார்ச்சர் ஒரு புறம், தர்மயுத்தம் நடத்தி பன்னீர் கொடுத்த இம்சைகள் மறுபுறம் என புது முதல்வரான எடப்பாடி பழனிசாமி தவியாய் தவித்தபோது அவரை தாங்கிப் பிடித்தவர்கள் நாமக்கல் தங்கமணியும், கோயமுத்தூர் வேலுமணியும்தான். முதல்வருக்கு அடுத்த நிலையில்தான் சகல அதிகாரத்துடன் இருவரும் வலம் வரும் நிலையில், வேலுமணி மீது முதல்வருக்கு இந்த போஸ்டரினால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது கோட்டை வட்டாரத்தில்!