
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக விதிமுறைகளை மீறுவதாக திமுக வேட்பாளர் மருது கணேஷ் தேர்தல் அதிகாரி கார்த்திகேயனிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறந்ததிலிருந்து அவரது தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக அந்த தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் 45000 போலி வாக்காளர்களை நீக்கியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த முறையைப்போல் பணப்பட்டுவாடா செய்யப்படாமல் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
வெளியூரிலிருந்து தேவையில்லாமல் வாகனங்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் செல்லவோ நிறுத்தப்படவோ கூடாது, மாலை 5 மணிக்கு மேல் காலை 9 மணிவரை வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது போன்ற அதிரடி கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வீதிக்கு ஒரு துணை ராணுவப்படை வீரரை நிறுத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் தேர்தலை கண்காணிக்க 9 பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்தே தேர்தல் நடத்தை விதிகள் ஆர்.கே.நகரில் அமலில் உள்ளதால், ஆர்.கே.நகர் தொகுதியில் எந்தவிதமான திட்டங்களையும் செயல்படுத்தக்கூடாது.
இந்நிலையில், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தேர்தல் அதிகாரி கார்த்திகேயனிடம், அதிமுக விதிகளை மீறுவதாக புகார் அளித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைப்பதாகவும் நீக்கப்பட்ட போலி வாக்காளர்களை மீண்டும் சேர்க்க முயற்சிப்பதாகவும் மருதுகணேஷ் புகார் அளித்துள்ளார்.