காரை ஏற்றி, துப்பாக்கியால் சுட்டு வெறிச்செயல்… பா.ஜக. தொண்டர்களை அடித்தே கொன்ற விவசாயிகள்.!

By manimegalai aFirst Published Oct 4, 2021, 7:09 AM IST
Highlights

அமைதியாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் அணிவகுத்து வந்த கார்கள் சரமாரியாக மோதின. காரில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் விவசாயிகள் அலறியடித்து ஓடினர்.

அமைதியாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் அணிவகுத்து வந்த கார்கள் சரமாரியாக மோதின. காரில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் விவசாயிகள் அலறியடித்து ஓடினர்.

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் பாஜக-வினர் நடத்திய தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற கலவரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. லகிம்பூர் கேரி மாவட்டம் திகுனியாவில் நேற்றைய தினம் அம்மாநில துணை முதலமைச்சர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர்.

கருப்புக்கொடி மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அணிவகுத்து வந்த கார்கள் விவசாயிகள் மீது சரமாரியாக ஏறிச்சென்றது. இதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காரில் இருந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மற்ற விவசாயிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த விவசாயிகள் காரில் இருந்த பாஜக தொண்டர்கள், ஓட்டுனர்களை அடித்தே கொன்றனர். தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறைக்களமாக மாறியதில் சுமார் 8 பேர் உயிரிழந்தனர்.

விவசாயிகள் மீதான கொடூர தாக்குதலுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

click me!