
டெல்லி: ஒத்தைக்கு ஒத்தையா ஓட்ட பந்தயம் வச்சுக்கலாம், தயாரா என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் சவால் விடுத்து இருக்கிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத். காங்கிரஸ் கட்சியின் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவர். அண்மையில் அவரை பற்றி பேசிய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான், கமல்நாத்துக்கு வயதாகிவிட்டதால் டெல்லியில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார் என்று கூறி உள்ளார்.
அதற்கு இப்போது செமையாக பதிலடி கொடுத்துள்ளார் கமல்நாத். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
எனது உடல்நலன் பற்றி பலவிதமான யூகங்கள், கருத்துகள் உலா வந்து கொண்டு இருக்கின்றன. எனது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது, வயதாகி விட்டது என்று முதலமைச்சர் சிவராஜ் சவுகான் கூறி வருகிறார். நான் ஓய்வில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
அவருக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். வாருங்கள் நாம் ஒன்றாக ஓட்ட பந்தயம் ஓடுவோம். டெல்லியில் இருக்கிறேன் என்பதற்காக நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் என்று அர்த்தமல்ல. மருத்துவ பரிசோதனை முடிவுகள் நல்லபடியாகவே வந்திருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.