பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்குவதுபோலவே சீமான் பேசுகிறார்.. கே.பாலகிருஷ்ணனுக்கு வந்த டவுட்.!

By Asianet TamilFirst Published Oct 3, 2021, 9:23 PM IST
Highlights

 நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குவது போல் சீமானின் கருத்து உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

புதுக்கோட்டையில் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்கிறது. அதையெல்லாம் கண்டுகொள்ளாதவர்தான் சீமான். ஆனால், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதார திட்டமாக விளங்கிக்கொண்டிருக்கும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை சீமான் குறை கூற என்னக் காரணம்? 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குவது போல் சீமானின் கருத்து உள்ளது. ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் இந்தியா முழுவதும் 14 கோடிப் பேர் பயன்பெற்று வருகிறார்கள். கடந்த காலங்களில் கமல்ஹாசன் பேசியதை போலவே இப்போது சீமான் பேசியிருக்கிறார்.
இப்படிச் சிலர் பேசினாலும்கூட, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நகர்ப்புறங்களிலும் செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இதேபோலவே நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் இணைய வழியில் முன்பதிவு செய்யும் உத்தரவையும் சீமான் எதிர்க்கிறார். குடிமைப்பணி தேர்வில் தமிழகத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்வாகி இருக்கிறார்கள். வருங்காலத்தில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பயிற்சி மையங்களை உயர்த்த முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டணியைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலை போல உள்ளாட்சித் தேர்தலிலும் எதிர்பார்க்க முடியாது. என்றாலும் திமுக கூட்டணி ஓரளவு கட்டுப்பாடுடன் இயங்குகிறது. 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரளும் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

click me!