பெண்களின் உடல் மீது நடத்தப்படும் வன்முறை, சுரண்டல்.. தலைமைச் செயலகத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Jun 6, 2022, 4:49 PM IST
Highlights

கருமுட்டை விற்பனை மற்றும் கருக்கொலை உள்ளிட்டவற்றை தடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 

கருமுட்டை விற்பனை மற்றும் கருக்கொலை உள்ளிட்டவற்றை தடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம் அதிகரித்து வரும் பெண் கருக்கொலை தடுத்திடவும், கருமுட்டை வணிகத்தை தடுத்து நிறுத்திடவும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது தொடர்பாக இந்த கடிதத்தை  எழுதுகிறேன்..

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் சட்டவிரோதமாக பாலின தேர்வின் அடிப்படையில் பெண் கருக்கலைப்பு நடந்துள்ளதாகவும், அதில் 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஸ்கேன் மையங்கள் மருத்துவர்கள் உட்பட அனைத்து அமைப்புகளையும் கண்காணிப்பதற்கு சட்டம் வழிவகை செய்தாலும் இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கரு முட்டை விற்பனை நடந்த செய்தி வெளிவந்துள்ளது. 16 வயது சிறுமியை கொடுமைப்படுத்தி நிர்பந்தத்தின் அடிப்படையில் கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் அந்த சிறுமியின் தாய் உடந்தையாக இருந்துள்ளார். இதில் அரசின் சார்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது பற்றிய செய்திகள் வெளிவருவது குறைவாக இருந்தாலும் கருமுட்டை வணிகம் பரவலாக நடப்பதாக தகவல்கள் வருகின்றன.

வணிக ரீதியாக வாடகை, கர்ப்பப்பை முறை தடை செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை வணிகம் குறித்து சட்டங்கள் எதுவும் இல்லாத சூழ்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வழிகாட்டுதலின் எந்த அம்சமும் பின்பற்றப்படவில்லை, இந்தியாவிலும் தமிழகத்திலும் செயற்கைமுறை கருத்தரிப்பு மையங்கள் ஏராளமாக நிறுவப்பட்டு வருகின்றன. மருத்துவ சுற்றுலா மையமாக இந்தியா விளங்குவதால் சட்டவிரோதமான கருமுட்டை விற்பனை அதிகரித்திருக்கிறது. கருமுட்டை வணிகம் என்பது பெண்ணின் உடல் மீது நிகழ்த்தப்படும் கடுமையான சுரண்டல் மற்றும் வன்முறை ஆகும். செயற்கை ஹார்மோன்கள் செலுத்தப்பட்டு கூடுதலாக கருமுட்டைகள் எடுக்கப்படுவதால் பெண்ணின் உடல் அதிக பாதிப்புக்குள்ளாகிறது. குடும்ப வறுமை சுரண்டல் வலையில் விழ காரணமாக உள்ளது. 

குற்றங்கள் நிகழ்ந்த பின்னர் நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருந்தாலும் இவற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் தேவைப்படுகின்றன. கருமுட்டை விற்பனைக்கு காரணமாக இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஸ்கேன் சென்டர் உரிமையாளர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். கருமுட்டை விற்பனையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து அச்சிறுமிக்கு கல்வி புகட்டி அவளது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல்  கருவில் பாலினம் அறியும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தை முழுமையாக தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். பெண் கரு கொலையை தடுக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!