இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஐஐடி மறுக்கிறது... ராமதாஸ் கடும் கண்டனம்!!

By Narendran SFirst Published Jun 6, 2022, 3:45 PM IST
Highlights

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஐடிகளிலும் பின்னடைவுப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, அவை அனைத்தையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஐடிகளிலும் பின்னடைவுப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, அவை அனைத்தையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் உள்ள 49 உதவிப் பேராசிரியர் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட ஆள்தேர்விலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் எத்தனை முறை எச்சரித்தாலும் கூட இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஐ.ஐ.டி நிர்வாகங்கள் மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. சென்னை ஐஐடி மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து ஐஐடி.,கள், ஐஐஎம்.,களிலும் சமூகநீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட சமூக நீதி இயக்கங்களின் தொடர் போராட்டம் மற்றும் வலியுறுத்தல் காரணமாக, ஐ.ஐ.டிகள், ஐ.ஐ.எம்களின் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி முழுக்க முழுக்க இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு 49 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை கடந்த நவம்பர் 3ம் தேதி சென்னை ஐஐடி வெளியிட்டிருந்தது. அதன் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 49 பின்னடைவுப் பணியிடங்களில் 24 பணியிடங்கள் மட்டுமே நிரப்பட்டுள்ளன. மீதமுள்ள 25 பணியிடங்களுக்கு தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்று கூறி, அந்த இடங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 14 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 19 இடங்களில் 10 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. உயர்சாதி ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 இடங்களில் ஒன்று கூட நிரப்படவில்லை. இந்த இடங்களுக்கு தகுதியான பலர் விண்ணப்பித்திருந்தும் கூட, அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் இருந்தும் கூட, அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதன் நோக்கம், அந்த இடங்களுக்கு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலிருந்து தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்று கூறி, அந்த இடங்களை பொதுப்போட்டிப் பிரிவுக்கு கொண்டு சென்று, தங்களுக்கு வேண்டியவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பது தான். ஐஐடி.,gகள் மற்றும் ஐஐஎம்.,களில் காலம் காலமாகவே இந்த நடைமுறையை பின்பற்றித் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. அதன் விளைவாகத் தான் சென்னை ஐ.ஐ.டி.யில் மொத்தமுள்ள 684 ஆசிரியர் பணிகளில் 599 பணிகள் உயர் வகுப்பினருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்கு 66 இடங்கள், பட்டியலின வகுப்பினருக்கு 16 இடங்கள், பழங்குடியினருக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஐஐடிகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது என்பதால் தான், அவர்களுக்கு மட்டும் 49 இடங்களை ஒதுக்கீடு செய்து நிரப்ப மத்திய அரசு ஆணையிட்டிருந்தது. இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்பட்டிருந்தால், சென்னை ஐஐடியில் மொத்தமுள்ள 684 ஆசிரியர் பணியிடங்களில், பிற்படுத்தப்பட வகுப்பினருக்கு 27% அதாவது 185 இடங்களும், பட்டியலினத்தவருக்கு 102 இடங்களும், பழங்குடியினருக்கு 51 இடங்களும் கிடைத்திருக்க வேண்டும். 

ஆனால், பிற பிற்படுத்தப்பட்டவர்களை 25 இடங்களிலும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினரை 19 இடங்களிலும் நியமிப்பதற்காக சிறப்பு ஆள்தேர்வு முகாம் நடத்தப்படுவதைக் கூட சென்னை ஐ.ஐ.டியில் உள்ள சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்படியானால், ஐஐடிகளில் சமூகநீதியை ஏற்படுத்த இன்னும் எத்தனை யுகம் ஆகுமோ? ஐஐடிகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவற்றில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசும் ஐஐடிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், ஐஐடி நிர்வாகங்கள் அதை மதிக்க மறுக்கின்றன. இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வாக இருந்தாலும் கூட, பங்கேற்கும் போட்டியாளர்களில் அதிக தகுதி படைத்தவர்கள் யாரோ, அவர்களை தேர்ந்தெடுக்கும் முறை தான் இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், ஐஐடி நிர்வாகங்கள், தங்களுக்கென ஓர் அளவுகோலை வைத்துக் கொண்டு இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை தகுதியற்றவர்கள் என்று கூறி நிராகரிப்பதும், பின்னர் அந்தப் பணியிடங்களை பொதுப்பிரிவுக்கு மாற்றி தங்களுக்கு விருப்பமானவர்களை நியமித்துக் கொள்வதும் காலம் காலமாக நடைபெறும் அநீதிகள். இந்த அநீதி அகற்றப்படும் வரை ஐஐடிகளில் சமூக நீதியை வளர்க்க முடியாது என்பதே உண்மை. சென்னை ஐஐடியில் இப்போது நிரப்பப்படாத 25 பணியிடங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பின்னடைவு பணியிடங்களும் அடையாளம் காணப்பட வேண்டும். அதே போல் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஐடிகளிலும் பின்னடைவுப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, அவை அனைத்தையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

click me!